பக்கம்:விந்தன் கதைகள் 1.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சமுதாய விரோதி

233

"அக்கம் பக்கத்திலேதான் யாருமே இல்லையே!" என்று சொல்லிக் கையை விரித்துக் கொண்டே அவர்களை தொடர்ந்து சென்றான் புஷ்பராஜ்.

ஐயோ! இது என்ன? அங்கே பூட்டியிருந்த அறை திறந்திருந்தது. அந்த அறைக்கு முன்னால் பத்துப் பன்னிரண்டு பேர் கூடியிருந்தனர். அதற்குள் போட்டிருந்த ஒரு நாற்காலியின் மேல் பெரிய ஜாடி ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அதன் அருகே பயங்கர ஆகிருதியுடன் ஒருவன் நின்று கொண்டிருந்தான். அவனுடைய கையில் ஓர் அளவுக் கிண்ணம் இருந்தது. அந்த ஆசாமி உள்ளே வந்த வாடிக்கைக்காரர்களுக்கெல்லாம் நாட்டுச் சாராயத்தை அளந்து ஊற்றிக் கொண்டிருந்தான்.

அதாவது, மதுவிலக்குப் பிராந்தியத்தில் அசல் சாராயக் கடை ஒன்று திறந்து வைக்கப்பட்டிருந்தது.

அருவருக்கத்தக்க இந்தக் காட்சியைக் கண்டதும் புஷ்பராஜின் கண்களில் தீப்பொறி பறந்தது. "அப்பா நீங்கள் தானா சட்டத்தை மீறிச் சாராயம் காய்ச்சும் அந்தக் குடிகெடுக்கும் மனிதர்?" என்று அவன் வியப்புடன் கேட்டான்.

அவன் குரல் நடுங்கிற்று.

"ஆமாண்டா, ஆமாம்!" என்று சொல்லிவிட்டு அவர் ஒரு பயங்கரச் சிரிப்புச் சிரித்தார்.

அவன் தலை சுழன்றது.

"அப்பா இது சட்ட விரோதம்" என்று ஆரம்பித்தான் அவன்.

"அது எனக்குத் தெரியும்; அப்புறம்?" என்று உறுமினார் அவர்.

"மனித தர்மத்துக்கும் விரோதம், அப்பா!"

"அதுவும் எனக்குத் தெரியும்; அப்புறம்?”

"அப்புறமா திருட்டுச் சாராயத்தை காய்ச்சி ஊற்றி இந்த ஊமை ஜனங்களை அணுஅணுவாகக் கொல்வதைக் காட்டிலும், விஷத்தை ஊற்றி ஒரேயடியாய்க் கொன்றுவிடலாம், அப்பா" என்றான் அவன்.

‘'அடேய், என்ன சொன்னே? நேற்று பிறந்த பயல், நீ! நீயா எனக்கு வந்து புத்தி சொல்றே? இதெல்லாம் பெரியவங்க காரியம்; நீ ஒண்ணும் கண்டுகிடாதோ!" என்று நான் உனக்கு முன்னாலேயே