பக்கம்:விந்தன் கதைகள் 1.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



முல்லைக் கொடியாள்

21

அதற்குப் பிறகு "ஆமாம், இதை எப்படி அவள் தலையில் கொட்டுவது?” என்று பிரச்சனை தோன்றி என்னை வதைத்தது. போகும்போது அவள் வீட்டுக் கொல்லைப் பக்கமாகப் போவது; வழியில் சந்தித்தால் அவள்தலையில் கொட்டுவது; இல்லாவிட்டால் தங்கை இருக்கவே இருக்கிறாள்!” என்று கடைசியில் தீர்மானித்துக் கொண்டேன்.

* * *

அவள் வீட்டை நான் நெருங்கிய போது மணி ஆறுக்கு மேலிருக்கும். நான் எதிர்பார்த்தபடி அவள் கொல்லைப் பக்கத்தில் தான் இருந்தாள். அவளுக்கு எதிரே ஓர் எருமைக் கன்று துள்ளி ஓடிக் கொண்டிருந்தது. அதைப் பிடித்துக் கட்ட எத்தனித்துக் கொண்டிருந்த அவள் என்னைக் கண்டதும் "அன்றைக்கு முல்லை கொடியைப் பிடித்துக் கொடுத்தீர்களே, இன்றைக்கு எருமைக் கன்றைப் பிடித்துக் கொடுங்களேன், பார்க்கலாம்?" என்றாள்.

அவள் ஏமாந்தால், தன் தாயின் மடியில் இருக்கும் பாலையெல்லாம் குடித்து விடலாமென்று எண்ணங் கொண்டிருந்த அந்த எருமைக் கன்று, சிறிது நேரம் என்னையும் ஆட்டிப் படைத்த பிறகு சிக்கிக் கொண்டது. அவள் அதைப் பிடித்துக் கட்டிக்கொண்டே ‘நல்ல சமயத்தில் வந்து சேர்ந்தீர்கள் என்றாள்.

"நல்ல சமயமா என்னத்திற்கு?" என்று கேட்டேன் நான்.

"நீங்கள் பட்டணத்துப் பணக்கார ராஜா; நானோ பட்டிக்காட்டு ஏழைப் பெண். என்னுடைய கல்யாணத்தின்போது நீங்கள் வருகிறதாயிருந்தால், அது நல்ல சமயந்தானே?" என்றாள் அவள்.

எனக்குத் தூக்கி வாரிப் போட்டது. "உனக்கா கல்யாணம்? எப்பொழுது? எங்கே?" என்று பரபரப்புடன் கேட்டேன்.

“நாளைக்கு நம்ம ஊர்க் காத்தவராயன் சத்திரத்திலேதான்!” என்று அவன் சாவதானமாகப் பதில் சொன்னாள்.

என் தலையில் இடி விழுந்தது போலிருந்தது. இதற்குத்தானா அவள் என்மீது அன்று அத்தனை அன்பு காட்டினாள்? அந்த அன்பின் அர்த்தந்தான் என்ன? அதெல்லாம் வெறும் விளையாட்டுத்தானா?

எனக்கு ஒன்றுமே புரியவில்லை. "அப்படியானால் நீ...நீ...." என்று தடுமாறினேன் நான். "என்ன?" என்று கேட்டாள் அவள்.