பக்கம்:விந்தன் கதைகள் 1.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சமுதாய விரோதி

237

நல்லமுத்தோ அவனைத் 'தெய்வம்' என்றே சொல்லி விட்டான்.

எதையும் புஷ்பராஜ் பொருட்படுத்தவில்லை. ஆனால் அவனுடைய இதயத்தின் அடிவாரத்தில் மட்டும் இன்னதென்று விவரிக்க முடியாத ஒரு வேதனை குடி கொண்டிருந்தது. அந்த வேதனை சிற்றன்னைக்கு என்ன சமாதானம் சொல்வதென்ற வேதனைதான்.

அவளோ அவனை ஏறெடுத்துக் கூடப் பார்க்காமல் அழுத கண்ணும் சிந்திய மூக்குமாக ஒரு மூலையில் உட்கார்ந்து 'துக்கம்' கொண்டாடிக் கொண்டிருந்தாள்.

புஷ்பராஜ் அவளை மெல்ல நெருங்கி, "சித்தி என்னை மன்னித்து விடுங்கள் சித்தி!" என்று தழுதழுத்த குரலில் வேண்டினான்.

அதே சமயத்தில் பத்திரிகைகளின் மூலம் விஷயத்தை அறிந்த கபர்தார் கனகராஜின் இளைய மாமனார் தாழம் பேடை நோக்கிப் பறந்து வந்து சேர்ந்தார்.

சோகமே உருவாய் உட்கார்ந்திருந்த மகளைக் கண்டதும் அவருக்குப் பகீரென்றது. "ஏன் தம்பி! இப்படிக்கூடச்செய்யலாமா?" என்று அவர் புஷ்பராஜை நோக்கிக் கேட்டார்.

அவரிடம் பணம் இல்லாததால்தானோ, என்னவோ அவருடைய குரலில் ஆத்திரம் இல்லை; அனுதாபம் இருந்தது.

புஷ்பராஜ் ஒன்றும் சொல்லாமல் தலையைக் குனிந்து கொண்டான். அவனுடைய கண்களிலிருந்து இரண்டு சொட்டுக் கண்ணிர்த்துளிகள் கீழே விழுந்து சிதறின.

பெரியவர் "அவர் உன்னைப் பெற்று வளர்த்தவர் இல்லையா?" என்று கேட்டார்.

புஷ்பராஜ் குனிந்த தலை நிமிராமல் "ஆமாம்" என்றான்.

“புஷ்பராஜ் என்று அழகாகப் பெயரிட்டு அன்புடன் உன்னை அழைத்தவர் இல்லையா?”

“ஆமாம்”

“நீ படித்து முன்னுக்கு வரவேண்டும் என்பதற்காகப் பணத்தைத் தண்ணீராப் பாவித்துச் செலவழித்தவர் இல்லையா?”

“ஆமாம்”