பக்கம்:விந்தன் கதைகள் 1.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பொன்னையா

"என்னா சின்னி வயிற்றைக் கிள்ளுகிறது; சோத்தையாச்சும் வடிச்சயா?" என்று கேட்டுக் கொண்டே வந்தான் பசியால் வாடிய பொன்னையா.

"நீயும் கேட்கிறயே வெட்ட வெளியிலே அடுப்பைப் பற்ற வச்சிட்டு நான் அவதிப்படறேன். குழந்தை வேறே பனியிலே படுத்துக் காலையிலேருந்து காயலாக் கிடக்குது. எனக்கு வேலையே ஒண்ணும் ஒடலே. அடிக்கிற காத்துலே இந்த அடுப்பு கொஞ்சமாச்சும் எரியுதா?" என்று எரிந்து விழுந்தான் சின்னி.

"என்னை என்ன பண்ணச் சொல்றே. சின்னி? என் அப்பன் எனக்கு ஆஸ்தியா வச்சுட்டுப்போன அந்த ஒரே ஒரு பொத்தல் குடிசையையும் பாழாய்ப் போன வெள்ளம் வந்து அடிச்சுட்டுப் போயிடிச்சு. இப்ப அந்த வீட்டைக் கட்டறதுன்னா கையிலே காசில்லே..."

"எதுக்குத்தான் ஒங்கிட்டெ காசு இருந்தது? நீயும் வந்து வெடிஞ்சயே, என்தலையிலே உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு நான் என்ன சுகத்தைக் கண்டேன்? நகை உண்டா? நட்டு உண்டா? இல்லை நல்ல புடவையாச்சும் ஒண்ணு உண்டா? நான் வந்த வழி! ...ஊ....உ.ம்.....ஊ....... உம்" என்று தன் புடவையின் மேலாக்கை எடுத்துக் கண்களைக் கசக்கிக் கொண்டு அழ ஆரம்பித்து விட்டாள் சின்னி.

"அழு, அழு நல்லா அழு நான் அந்தத் தெருப்பக்கமாகப் போயிட்டு வாரேன்!” என்று கீழே வைக்கப்போன அடைப்பத்தை மீண்டும் தூக்கி அக்கத்தில் வைத்துக் கொண்டு நடந்தான் பொன்னையா.

* * *

வீட்டுக்கு வீடு 'லேப்டி ரேஸர்' வைத்துக் கொண்டிருக்கும் இந்த நாளிலே பொன்னையாவின் பிழைப்பு rணதசையை அடைந்திருந்தது. கிடைத்ததைக் கொண்டு வயிற்றைத் திருப்தி செய்து கொள்ளவே அவனால் முடியவில்லை. இந்த லட்சணத்தில் அவன் இழந்த வீட்டை மீண்டும் கட்டிக் கொள்வதென்றால் குறைந்தது ஐம்பது ரூபாயாவது வேண்டுமே அடே அப்பா இந்த ஜன்மத்தில் அத்தனை ரூபாயை அவன் கண்ணாலாவது பார்க்க முடியுமா?