பக்கம்:விந்தன் கதைகள் 1.pdf/284

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
அவன் கேள்வி

எத்தனை முறை எண்ணிப் பார்த்தாலும் எனக்கு இது அதிசயமாய்த்தான் இருக்கிறது. தன் உயிரின்மேல் அந்தக் கிழவனுக்குத்துளிக்கூட ஆசை இல்லை; ஆனால் உயிரோ அவன் மீது அளவற்ற ஆசை வைத்திருக்கிறது. என்ன செய்வான், பாவம்! படுக்கையில் படுத்தபடி ஒரு நாளைப்போலத் தன் உயிரோடு அவன் போராடிக் கொண்டிருந்தான்.

அன்று மாலை அந்த ஊர் ஆலையின் சங்கு ஊதி ஓய்ந்ததும், வழக்கம் போல் அந்தக் கிழவரின் முகம் மலர்ந்தது. "பையன் இன்னும் கொஞ்ச நேரத்திற்கெல்லாம் வந்து விடுவான் என்று தனக்குள் சொல்லிக் கொண்டான். இத்தனைக்கும் அந்தப் பையன்" வந்து அவனுக்குப் புதிதாக ஆகப்போவது ஒன்றுமே யில்லை.

கிழவன் எதிர்பார்த்தபடி அவன் அவ்வளவு சீக்கரமாக அன்று வீட்டுக்கு வந்து விடவில்லை; அவனுக்குப் பதிலாக இருள்தான் அவசர அவசரமாக வந்து அவன் வீட்டைக் கவ்விக் கொண்டது.

"ஏ, முனியம்மா, நீ எங்கே போயிட்டே?" என்று கிழவன் இரைந்தான்; பதில் இல்லை.

“எங்கே போயிருப்பா? வீட்டிலே கொஞ்சம் விளக்கையாச்சும் ஏத்தி வச்சுட்டுப் போயிருக்கக் கூடாதா?”

இதற்குள் யாரோ வரும் காலடி ஓசை அவன் காதில் விழுந்தது. ‘முனியம்மா’ என்றான் கிழவன் மீண்டும்.

"ஏன்?"

‘எங்கே அம்மா, போயிட்டே? பொழுதோட விளக்கைக் கொஞ்சம் ஏத்தி வைக்கக் கூடாதா?”

‘அதுக்குத்தான் தீக்குச்சி வாங்கிவரப் போயிருந்தேன்’

"எதுக்குத் தீக்குச்சி - யாரு வீட்டு விளக்கிலாச்சும் கொஞ்சம் ஏத்திக்கிட்டு வந்துட்டாப் போச்சு"

‘நல்லாச் சொன்னீங்க இன்னொருத்தர் வீட்டிலே நம்ம வீட்டு விளக்கை ஏத்தப் போனா சும்மா இருப்பாங்களா? அவங்க வீட்டு லச்சுமி நம்ம வீட்டுக்கு வந்துட்டான்னு சண்டை பிடிக்க மாட்டாங்களா!'