பக்கம்:விந்தன் கதைகள் 1.pdf/289

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

286

விந்தன் கதைகள்

முப்பத்தைந்து ரூபாயை கண்ணுச்சாமியிடம் கொடுத்தான். இதனால் அவனுடைய கவலையும் ஒருவாறு தீர்ந்தது. மாதா மாதம் சம்பளம் வாங்கி அப்படியே காபூலிவாலாவிடம் கொடுத்து விடுவான். அவன் அதைப் பழைய கடனுக்கு வரவு வைத்துக் கொண்டு, புதுக் கடனாக மீண்டும் நாற்பது ரூபாய் கொடுப்பான் - வட்டிக்காக ஐந்து ரூபாய் எடுத்துக்கொண்டு தான் - இந்த ரீதியில் கண்ணுச்சாமியின் காலம் கழிந்து வந்தது.

மத்தியில் ஏதாவது 'போனஸா'கக் கிடைக்கும்போது கண்ணுச்சாமி அந்தக் கடனைத் தீர்த்து தலை முழுகிவிட வேண்டும் என்று நினைப்பான். ஆனால், மனிதன் நினைப்பதுபோல்தான் தெய்வம் நினைப்பதில்லையே! - அதற்கென்று வேறு வகைகளில் ஏதாவது செலவோ, கடனோ காத்துக் கொண்டிருக்கும். அவை போனஸ் தொகையைச்சந்தடி செய்யாமல் விழுங்கிவிட்டு அப்பாற் போய்விடும். அந்த நாற்பது ரூபாய் கடன் மட்டும் என்றும் சிரஞ்சீவியாக இறவா வரம் பெற்றதாக காபூலிவாலாவுக்கு மாதம் ஐந்து ரூபாய் லாபத்தையும், கண்ணுச்சாமிக்கு ஐந்து ரூபாய் நஷ்டத்தையும் கொடுத்துக் கொண்டு ஆடாமல் அசையாமல் உட்கார்ந்திருக்கும். இது கதையல்ல; கற்பனையல்ல; கண்ணுச்சாமியின் சொந்த அனுபவம்!

* * *

அன்று பத்தாந்தேதி, சனிக்கிழமை; சம்பள தினம், காலையில் கண்ணுச்சாமி வேலைக்குக் கிளம்பும் போது, ‘மத்தியானம் சாப்பிட வீட்டுக்கு வராதீங்க அங்கேயே ஏதாச்சும் வாங்கித் தின்னுட்டு வேலையைப் பாருங்க!” என்றாள் முனியம்மாள்.

"ஏன்... ?"

"அந்தச் சோளமாக்கூட நேத்தோடே தீர்ந்து போச்சு சாயந்திரம் சம்பளம் வந்து நாளைக்குப் போய் அரிசி வாங்கிக்கிட்டு வந்தாத்தான் அடுப்புப் புகையும்!"

"உம்.....இங்கே இப்படியிருக்குது, அங்கே என்னடான்னா, அந்தப் பயலுங்கெல்லாம் நேத்துக் கூடி இன்னைக்குச் சம்பளத்தை வாங்கிக்கிறதுன்னும், நாளையிலேருந்து ‘ஸ்டிரைக்கு” செஞ்சிப்பிடறதுன்னும் தீர்மானம் பண்ணிப்பிட்டானுங்க!"