பக்கம்:விந்தன் கதைகள் 1.pdf/288

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



அவன் கேள்வி

285


"நல்ல வேலை செஞ்சே! அவரு இன்னும் கொஞ்ச நாளைக்கு அந்த 'ஸ்பெஷலு கஞ்சி'யைக் குடிச்சி நமக்குத் துணையா யிருக்கட்டும்" என்றான் கண்ணுச்சாமி.

* * *

கண்ணுச்சாமியின்குடும்பத்தில் ஒருநாள் காட்சி இது. ஒருநாள் என்ன, ஒவ்வொரு நாளும் இதே காட்சி தான். மாதந்தோறும் அவனுக்கு ஏறக்குறைய நாற்பது ரூபாய் கிடைத்து வந்தது . பஞ்சப்படியையும் சேர்த்துத் தான்! இந்த வரும்படியில்தான் அந்த நாலு ஜீவன்களும் காலத்தைக் கழிக்கவேண்டும்.

'வரவுக்குத் தகுந்த செலவு செய்ய வேண்டும்' என்பதில், அவனுடன் அவனைச் சேர்ந்த மூன்று ஜீவன்களும் ஒத்துழைத்தன. ஆனால் ஒத்துழைக்காத ஒன்றும் அவர்களிடையே இருக்கத்தான் செய்தது. அது வேறு எதுவுமில்லை; அவரவர்களுடைய வயிறுதான்! பார்க்கப்போனால் அந்த வயிறுகளின்மீதும் குற்றம் சொல்வதற் கில்லை. ஏனெனில், ஆண்டவன்தான் ஏழை - பணக்காரன் என்ற வித்தியாசமின்றி அந்த வயிறுகளைத் தினந்தோறும் நாலு வேளைப் பசிக்கு ஆளாக்கினான். கடவுளையும் மீறி அவற்றை கண்ணுச் சாமியால் ஒருவேளை ஏமாற்ற முடிந்தது; சில நாட்கள் இரண்டு வேளைகள் கூட ஏமாற்ற முடிந்தது. ஆனால், ஒருநாளாவது நாலு வேளைகளிலும் ஏமாற்றமுடியவில்லை!

இதனால் அவன் மாதாமாதம் தன்வரும்படிக்கும் மேலே, வேறு யாரிடமாவது ஐந்து, பத்து என்று கடன்வாங்க நேர்ந்தது - வட்டிக்குத் தான் இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால், அவனால் கடன் வாங்கத்தான் முடிந்ததே தவிர, திருப்பித் தர முடியவில்லை. அப்படியே கொடுத்தாலும் அதைத் திருப்பி வாங்காமல் இருக்க முடியவில்லை.

இப்படியே ஆளுக்குக் கொஞ்சமாக வாங்கிய கடன் நாளடைவில் முப்பது ரூபாய்க்கு மேல் ஆகிவிட்டது. அதாவது, கிட்டத்தட்ட அவனுடைய ஒரு மாதச் சம்பளத்துக்குச் சேர்ந்து விட்டது; வாங்கிய சம்பளத்தைக் கடன்காரர்களிடம் கொடுத்துவிட்டு அவன் வெறுமனே வீட்டிற்கு வரமுடியுமா? ஆகவே, அவன் ஒரு யுக்தி, செய்தான். தன்னுடைய நண்பன் ஒருவன் உதவியால் ஒரு காபூலிவாலாவைப் பிடித்தான். அவனிடம் ரூபாய்க்கு இரண்டனா வட்டி விகிதத்துக்கு நாற்பது ரூபாய் மொத்தமாகக் கடன்வாங்கினான்.