பக்கம்:விந்தன் கதைகள் 1.pdf/287

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

284

விந்தன் கதைகள்


"அட பாவி பயல்களா திங்கிற சோத்திலே இப்படியும் மண்ணை அள்ளிப் போட்டுக்கிடுவானுங்களா?”

“யாரும் தான் சாக மருந்து தின்னமாட்டாங்க; பிழைக்கத்தான் மருந்து தின்னுவாங்க!" என்றாள் முனியம்மாள்.

“என்ன முனியம்மா! உனக்கு வாய் ரொம்ப நீண்டு போச்சே! வேலை செஞ்சி மாதம் பொறந்தா சம்பளம் வாங்கிக்கிட்டு வரப்பவே, நீ நேத்துப் பட்டினி, முந்தா நாள் பட்டினிங்கிறே, அதுவுமில்லேன்னா என்னத்தைச் செய்வே?" எனறு கேட்டான் கண்ணுச்சாமி.

"பாடுபடட்டும் 'பசி, பசி'ன்னு பரிதவிக்கிறதைவிட பாடு படாமலே பரலோகமாச்சும் போய்ச் சேர்ந்துடலாமில்லே?”

"அதுக்கும் நாளு வரவேணாமா? அந்த நாளு வந்துட்டா தன்னாலே போய்ச் சேர்ந்துடறோம்!”

“ஐயோ இந்த இளம் வயசுலே நீங்க இப்படி உலகத்தை வெறுத்துப் பேசற கண்றாவியை நான் எங்கே போய்ச் சொல்லி அழுவேன்? பாழும் எமனும் என்கிட்ட வந்துட்டான் போல இருக்குது; நான் வேறே உங்களுக்குப் பாரமா இன்னும் இருந்துக்கிட்டு இருக்கேன்" என்றான் கிழவன்.

இந்தச் சமயத்தில் "அந்த ரொட்டி ஆறிப் போவுது; எடுத்துக்கிட்டு வரட்டுமா?" என்று தன் கணவனை நோக்கிக் கேட்டாள் முனியம்மாள்.

"சரி, எடுத்துக்கிட்டு வா எரிகிற வயித்துக்கு எதையாச்சும் போட்டு அடைக்க வேண்டியது தானே?" என்றான் கண்ணுச்சாமி.

அவன் கை கால்களை அலம்பிக் கொண்டு வருவதற்கும் முனியம்மாள் ரொட்டி கொண்டு வைப்பதற்கும் சரியாயிருந்தது. அதில் ஒன்றை எடுத்துச் சுவைத்துக் கொண்டே, "அப்பாவுக்குமா இந்த ரொட்டி?" என்று கேட்டான் கண்ணுச்சாமி.

"இல்லே, சாமி குத்தறப்போ விழற தவிட்டையெல்லாம் சேர்த்து வச்சிருந்தேன். அதை இன்னைக்கு எடுத்துப் புடைச்சுப் பார்த்தேன்; ஒரு கையளவு நொய் தேறிச்சு. அந்த நொய்யைக் கஞ்சியாய்க் காய்ச்சி அவருக்குன்னு எடுத்து வச்சிருக்கேன்!"