பக்கம்:விந்தன் கதைகள் 1.pdf/291

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

288

விந்தன் கதைகள்


ஓர் ஒற்றையடிப் பாதை - அது கலக்குமிடத்தில் ஒரு சின்னத் தெரு, அடுத்தாற்போல ஒரு பெரிய வீதி. அதற்கும் அப்பால் ஒரு விசாலமான சாலை அந்தச் சாலையின் கோடியே தெரியவில்லை - அதையும் கணப் பொழுதில் கடந்துவிட்டான் அவன். ஆயினும் அவன் நிற்கவில்லை; நடந்து கொண்டேயிருந்தான், எங்குதான் போகிறான்?

"என்ன கண்ணுச்சாமி எங்கே போறே?" என்று அவனை வழிமறித்துக் கேட்டான் ஒரு சகோதரத் தொழிலாளி.

அவனை மேலுங் கீழுமாகப் பார்த்துத் திருதிருவென்று விழித்துக் கொண்டே “வேறே எங்க போவேன்? வீட்டுக்குத்தான்" என்றான் கண்ணுச்சாமி.

"ஹிஹ்ஹிஹ்ஹி! உன் வீடு எங்கே போச்சு, இங்கே வந்து நிக்கிறியே, அப்பா!"

“மறந்துட்டேன்; என் வீட்டுக்கு வழி அப்படியில்லே போவுது" என்று சொல்லிக் கொண்டே கண்ணுச்சாமி திரும்பினான்.

"எப்படிப் போவுது? - இப்படிப் போறதை விட்டுட்டு அப்படியில்லே போறே தண்ணி கிண்ணி போட்டுக்கிட்டு இருக்கியா, என்னப்பா? சரி சரி எப்படியாச்சும் தொலைஞ்சுபோ, அதுவும் ஒருவிதத்திலே நல்லதுதான்" என்று சொல்லிவிட்டு, அவன் மேலே நடந்தான்.

கண்ணுச்சாமியோதன்பாட்டுக்குப் போய்க்கொண்டிருந்தான் - வேறு திசையை நோக்கினான்.

வழியில் ஒரு சிறுவன் இராப் பள்ளியிலிருந்து வந்து கொண்டிருந்தான். அவன் கையில் நோட்டுப் புத்தகத்தையும் பென்ஸிலையும் கண்டதும் கண்ணுச்சாமிக்குத் திடீரென்று ஒரு யோசனை தோன்றிற்று. அவனிடமிருந்த நோட்டுப் புத்தகத்தை வாங்கி, அதில் ஏதோ எழுதினான். பிறகு, தான் எழுதிய பக்கத்தை மட்டும் கிழித்து எடுத்துச் சட்டைப் பைக்குள் திணித்துக் கொண்டு நடையைக் கட்டினான்.

இப்பொழுது அவனுடைய மூளை தீவிரமாக வேலை செய்தது. அதன் பயனாகத்தானோ என்னவோ, நாற்சந்தியொன்றைக் கண்டதும் அவனுடைய நடை சிறிது தளர்ந்தது. சிறிது நேரத்திற்கெல்லாம் அவன் அங்கே நின்று விட்டான்!