பக்கம்:விந்தன் கதைகள் 1.pdf/314

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மாறுதல் இல்லை

311

பொருத்தமும் இருக்கத்தான் செய்தது; காசு கொடுத்தால் நமக்கு வேண்டிய சாமான்கள் கடைத் தெருக்களில் கிடைக்கிறதல்லவா? அதேமாதிரி கட்டிடக் காண்ட்ராக்டர்களுக்கும் கூலி கொடுத்தால் அங்கே வேண்டிய ஆட்கள் கிடைப்பார்கள்.

அங்கே நிற்பவர்கள் அனைவருக்கும் தினசரி வேலை கிடைக்கும் என்பது நிச்சயமில்லை; ஒரு சிலருக்குத்தான் கிடைக்கும். மற்றவர்கள் சூரியன் உச்சி வானத்துக்கு வரும் வரை கால் கடுக்க நின்றுவிட்டு, ஏமாற்றத்துடன் வீடு திரும்புவார்கள். அவர்களில் சிலர் அன்று அநேகமாக அரைப்பட்டினி இருக்கவேண்டி யிருக்கும்; இன்னும் சிலர் முழுப் பட்டினி இருக்க வேண்டி யிருக்கும். இது ஒன்றும் அவர்களுக்குப் புதிதல்ல; தலைமுறை தலைமுறையாகவே அவர்களைத் தொடர்ந்து வரும் வழக்கம். இதில் வியப்புமில்லை; திகைப்புமில்லை!

செங்கண்ணனும் கண்ணாத்தாளும் தங்கள் இருவருக்கும் ஒரே இடத்தில் வேலை கிடைக்க வேண்டுமென்று எப்பொழுதுமே விரும்புவதில்லை. வெவ்வேறு இடங்களில் வேலை கிடைத்தாலும் அவர்கள் மனம் கோணாமல் செல்வார்கள். இரவு வீடு திரும்பியதும் மறுநாள் மத்தியானத்துக்கும் சேர்த்தாற்போல் சமையல் வேலை நடக்கும். பொழுது விடிந்ததும் கையில் கட்டுச் சாதத்துடன் அவர்களுடைய வயிற்றுப் பிரயாணம் ஆரம்பமாகும். வீட்டைப் பற்றியோ அந்தத் தம்பதிகளுக்குக் கவலையில்லை. ஏனெனில் திருடன் பயம்தான் அவர்களுக்குக் கொஞ்சம் கூடக் கிடையவே கிடையாதே!

* * *

செங்கண்ணன் தம்பதிகளுடைய குடிசைக்கு அடுத்தாற்போல் நாங்கள் நாலுபேர் சேர்ந்து ஒரு வாசக சாலை ஆரம்பித்திருந்தோம். இந்த வாசகசாலை பொதுஜன செளகரியத்துக்காக ஏற்படுத்தப்பட்டது என்று சொன்னால் நாங்கள் பொய் சொன்னவர்களாவோம். ஒண்டுக் குடித்தனம் இருந்த எங்களுக்குச் சிறிது நேரமாவது நிம்மதியுடன் காலம் கழிக்க ஏதாவது ஒர் இடம் வேண்டியிருந்தது. அதற்காக ஆரம்பிக்கப்பட்ட அந்த வாசகசாலையில் எங்களுக்கு இனாமாகப் பல பத்திரிகைகளை வாசிக்கும் வசதி கிடைத்தது. இதற்குக் காரணம் எங்களுடைய கஞ்சத்தனம் அல்ல; கண்கண்ட தெய்வமான காசில்லாத கஷ்டந்தான்.