பக்கம்:விந்தன் கதைகள் 1.pdf/315

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

312

விந்தன் கதைகள்

சாயந்திர வேளைகளில் அநேகமாக என்னை அந்த வாசக சாலையில் பார்க்கலாம். ஏதாவது ஒரு தினசரிப் பத்திரிகையைப் பிரித்து வைத்துக் கொண்டு உட்கார்ந்திருப்பேன். என்னையும் என்னுடைய நண்பர்களையும் தவிர, வேறு யாரையாவது அந்த வாசக சாலையில் பார்ப்பது அபூர்வம். ஆமாம், உலகச் செய்திகளைத் தெரிந்து கொள்வதில் அங்கிருந்தவர்களுக்கு அவ்வளவு ஆர்வம் இருந்தது.

எந்தக் கவலை எப்படியிருந்தாலும் செங்கண்ணன் மட்டும் நான் பத்திரிக்கை படிக்கும்போதெல்லாம் என்பக்கத்தில் வந்து உட்கார்ந்து விடுவான். அவனுக்கு உலகச் செய்திகளைத் தெரிந்து கொள்வதில் ஆர்வம் இல்லாவிட்டாலும், ஊர்ச் செய்திகளைத் தெரிந்து கொள்வதில் ஆர்வம் உண்டு.

நான் பத்திரிக்கையைப் பிரித்ததும் பிரிக்காததுமாக யிருக்கும்போதே “என்னங்க, இன்னிக்கு என்ன சேதிங்க?’ என்று கேட்டான் அவன்.ஆவலுடன்.

"நமக்குத்தான்சுயராஜ்யம் வந்துடுத்துன்னு உனக்குத் தெரியுமே! இனிமேல் நம் தலைவர்கள் ஒன்று செய்யப் போகிறார்களாம். அதாவது, உன்னைப் போன்ற ஏழைத் தொழிலாளிகளுக்கு முதலாளிகள் தங்களுக்கு வர லாபத்திலே பங்கு கொடுக்க வேணுமென்று சட்டம் செய்யப் போகிறார்களாம்”

"ம்....விட்டுத் தள்ளுங்க! என்னை யொத்தவங்க பிழைப்புத்தான் தினம் ஒரு முதலாளியைத் தேடிக்கிட்டுப் போறதா யிருக்குதுங்களே? நாங்க எந்த முதலாளியைக் காணப்போறோம், எந்த லாபத்தைக் காணப்போறோம்?”

"அப்புறம் இன்னொரு சேதி, நம் இந்தியாவின் மதிப்பு ஐரோப்பாவிலே வர வர உயர்ந்து கொண்டே இருக்கிறதாம்....”

"சரி இங்கேதான் உயரலே; அங்கேயாவது உயரட்டும்!”

“என்ன செங்கு, இதெல்லாம் உன்னைப் போன்றவர்களுடைய நன்மைக்குத்தான் என்று உனக்குத் தெரியமாட்டேன் என்கிறதே! - சரி, இன்னும் ஒரே ஒரு சேதி கேளு; உனக்குப் பின்னால் உன் பெண்டாட்டி, பிள்ளை எப்படிப் பிழைக்குமென்று நீ கவலைப்படுகிறாயா இல்லையா?”

“ஆமாங்க!”