பக்கம்:விந்தன் கதைகள் 1.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

34

விந்தன் கதைகள்

இதற்குக் காரணம் அவனுடைய அப்பாவைப் போல் அவன் தன்னைப் பற்றி மட்டும் சிந்திக்காமல் பிறரைப் பற்றியும் சிந்தித்துக் கொண்டிருந்தான்!

பிறந்த வேளை, தலையெழுத்து, கர்ம பலன், விதி என்றெல்லாம் ஏழைகளை ஏய்க்கும் பணக்காரர்களைக் கண்டால் தீனதயாளனுக்குப் பிடிக்காது. எடுத்ததற்கெல்லாம் காரணம் கடவுள் தான் என்று கூறுபவர்களைக் கண்டாலும் அப்படித்தான்!

பணம் படைத்த மகானுபாவர்கள் கடவுளையும் கர்ம பலனையும் கொஞ்சம் மறந்துவிட்டு, தங்கள் சொந்த முயற்சியினாலேயே ஏழை மக்களின் துயரத்தை ஒருவாறு நீக்கலாம் என்பது அவனுடைய திடமான நம்பிக்கை.

இத்தகைய லட்சிய புருஷனின் கண்ணில் தான் ஒரு நாள் கேதாரி பட்டு விட்டாள். அதுவும் எந்த நிலையிலே அவனுடைய தோப்பின் ஒலையைத் திருடிக் கொண்டு போகையிலே!

“ஓஹோ - இப்படி எத்தனை நாளா?”

கேதாரி திடுக்கிட்டு நின்றாள். ஒரு நிமிஷம் அவளுடைய உடம்பு நடுங்கி ஓய்ந்தது. மறு நிமிஷம் ஏதோ எண்ணித் துணிந்தவளாய், தலைமீதிருந்த ஒலைக் கட்டை இறக்கிக் கீழே வைத்தாள். இடுப்பின்மீது ஒரு கையை ஊன்றிக் கொண்டு எஜமானை நோக்கி, உங்க அப்பா என்னை எவனையாச்சும் இழுத்துக்கிட்டுப் போகச் சொல்லி எத்தனை நாளோச்சோ, அத்தனைநாளா!" என்றாள்.

தீனதயாளனுக்குத் தூக்கிவாரிப் போட்டது. அவன் ஒருவாறு சமாளித்துக் கொண்டு "அதற்கு....." என்று ஏதோ சொல்ல ஆரம்பித்தான்.

“. . . . . . நான் இந்த ஒலையை இழுத்துக்கிட்டுப் போறேன்" என்றாள் கேதாரி.

தீனதயாளனுக்கு ஒன்றும் புரியவில்லை. என்றாலும் "இது நியாயமா?’ என்று கேட்டு வைத்தான்.

"நியாயமில்லைதான்! ஆனா ஊரிலே உழைக்கிறவங்களுக்கு ஒரு நியாயமாயும், அவங்க உழைப்பிலே வயிறு வளர்க்கிறவர்களுக்கு இன்னொரு நியாயமாயுமிருக்குதே, அதுக்கு நாங்க என்ன பண்ணுவது? அவங்களைப் போல நாங்களும் கொஞ்சம் வாழனுமில்லே"