பக்கம்:விந்தன் கதைகள் 1.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

36

விந்தன் கதைகள்

அன்றிரவு தீனதயாளனுக்கு தூக்கமே பிடிக்கவில்லை. அவனுடைய சிந்தனை யெல்லாம் அன்று மாலை தனக்கும் கேதாரிக்குமிடையே நடந்த சம்பாஷணையைப் பற்றியதாகவே இருந்தது. இருளப்பனின் மனமாற்றத்துக்குக் காரணம் என்னவென்பதை அவன் ஒருவாறு ஊகித்து உணர்ந்து கொண்டான். அதை மாற்றுவதற்குத் தான் என்ன செய்ய வேண்டும்? அதற்கு ஏதாவது வழி உண்டா?

சிறிது நேரம் சிந்தித்துப் பார்த்தான். கடைசியில் ஒரு முடிவுக்கும் வந்து விட்டான்.

“ஆமாம் அப்படித் தான் செய்யவேண்டும். அதற்குக் குறுக்கே கடவுளும் நிற்கமாட்டார்; கர்மபலனும் நிற்காது" என்று தனக்குத் தானே அவன் சொல்லிக் கொண்டான்.

அதே மாதிரி, கேதாரியின் பேச்சைக் கேட்ட இருளப்பனுக்கும் அன்றிரவு தூக்கமே பிடிக்கவில்லை. எண்ணாத எண்ணமெல்லாம் எண்ணி அவன் இப்படியும் அப்படியுமாகப் படுக்கையில் புரண்டு கொண்டிருந்தான்.

இவர்களுக்காக இரவு காத்திருக்குமா என்ன? அது போயே போய்விட்டது. பொழுதும் புலர்ந்துவிட்டது. இருளப்பன் விடிந்ததும் விடியாததுமாக விழுந்தடித்துக் கொண்டு எஜமான் வீட்டுக்கு ஓடி வந்தான்.

"சாமி, தெண்டங்க!" என்று எஜமானுக்கு முன்னால் நெடுமரம் போல் விழுந்து எழுந்து நின்றான். "ஏழையை மன்னிச்சுடுங்கோ" என்று கண்ணிரும் கம்பலையுடன் வேண்டிக் கொண்டே மடியை அவிழ்த்தான். அதிலிருந்து இருபத்தைந்து ரூபாயை எடுத்து எஜமான் வீட்டுத் திண்ணையின் மேல் வைத்து, "என் மவ கண்ணாலத்துக்காக உங்க ஒலையைத் திருடி நான் இதுவரை சேர்த்து வச்சிருந்த தொகை இவ்வளவு தானுங்க" என்றான்.

யார், யாரை மன்னிப்பது? திருடியவன் இருளப்பன் தான். ஆனால் அவனைத் திருடத் தூண்டியவர் யார்? - சந்தேகமென்ன? நம்முடைய அப்பாதான்! - இப்படி எண்ணிக் கொண்டே தீனதயாளன் அந்த ரூபாயை எடுத்து மீண்டும் இருளப்பன் மடியில் போட்டான். உள்ளே சென்று இன்னும் இருபத்தைந்து ரூபாயை எடுத்து வந்து அவன் மடியில் வைத்தான்.

“என்ன இருளா கேதாரியின் கல்யாணத்துக்கு இவ்வளவு ரூபாய் போதுமா?"