பக்கம்:விந்தன் கதைகள் 1.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



ஏழையின் குற்றம்

சித்திரம் சிற்பம், நடனம், நாட்டியம் முதலிய கலைகளைச் சிலர் தங்கள் குல வித்தையாகக் கொண்டிருக்கிறார்களல்லவா? அதுபோலக் கூலிப் பிழைப்பைத் தன் குல வித்தையாகக் கொண்டிருந்தான் சின்னசாமி. அவன் அப்பன், பாட்டன், அந்தப் பாட்டனுக்குப் பாட்டன் எல்லாம் சீதாராமச் செட்டியாரின் முன்னோர்களிடம் பரம்பரை பரம்பரையாகவே கூலி வேலை பார்த்தவர்கள்.

செட்டியார் கடைக்கு வந்து இறங்கியதும் அரிசி மூட்டை, சர்க்கரை மூட்டை முதலியவைகளை யெல்லாம் சின்னசாமி கடை வாசலிலிருந்து தன் முதுகில் சுமந்து கொண்டு போய்க் கடை உள்ளில் அடுக்குவான். மூட்டைக்குக் காலனா வீதம், எந்தக் காலமா யிருந்தாலும் சரி - அதாவது, யுத்தக் காலமா இருந்தாலும் சரிதான்; சமாதானகாலமாயிருந்தாலும் சரிதான் எண்ணிக் கொடுத்து விடுவார் செட்டியார். ஆனால், என்றைக்காவது ஒரு நாள் சின்னசாமி அறுபத்து நாலு மூட்டைகளுக்குமேல் தூக்கி அடுக்கிவிட்டு, ஒரு ரூபாய்க்கு மேல் கூலி வாங்க வந்துவிட்டால் செட்டியாரின் கண்களிலிருந்து ஏனோ இரண்டு சொட்டுக் கண்ணிர் கீழே விழும்.

இந்தத் துக்க நிவர்த்திக்காக, அந்தக் கூலியிலிருந்து திருப்பதி தேவஸ்தானத்தின் தர்ம உண்டிக்கென்று செட்டியார் இரண்டனாவைப் பலவந்தமாக எடுத்துக் கொள்வார். “இகலோகத்திலுள்ள தன்னுடன் சமத்துவமாக வாழாவிட்டாலும் பரலோகத்திலாவது வாழட்டுமே!" என்பது செட்டியாரின் பரந்த நோக்கம்.

வழக்கம் போல் அன்றும் இரவு பத்து மணிக்குப் பிறகு, “நான் போயிட்டு வரேனுங்க" என்றான் சின்னசாமி.

“என்னடா, இத்தனை சீக்கிரம்?" என்று கேட்டார் செட்டியார்.

"இனிமேத்தான் என் கூலியை எடுத்துக்கிட்டு போய் ஏதாச்சும் வாங்கிக் கஞ்சி காய்ச்சிக் குடிக்கணும். அவவேறே காத்துக்கிட்டுக் கிடப்பா. குழந்தைங்க வேறெ அழுதுக்கிட்டு இருக்கும்!"