பக்கம்:விந்தன் கதைகள் 1.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

66

விந்தன் கதைகள்

பாட்டுக்கும் சரிக் கட்டுவதே சிரமமாயிருந்தது. இந்த நிலையில் அஜ்ஜாவின் கை நிறையத் தங்க வளையல்கள் வாங்கிப் போட வேண்டுமென்ற ஆசை எனக்கு உண்டாயிற்று. அந்த ஆசை தான் கடைசியில் என்னை அஜ்ஜா நிராகரிப்பதற்குக் காரணமாகிவிட்டது

கதையைக் கேளுங்கள்: ஒரு நாள் எனது எஜமானன் என்னிடம் ஐந்நூறு ரூபாயைக் கொடுத்து, பாங்கில் போட்டுவிட்டு வரும்படி சொன்னான். அந்தப் பணத்தை எடுத்துக் கொண்டு நான் நேரே நகைக் கடைக்குச் சென்றேன். அரை டஜன் தங்க வளையல்களை வாங்கி அஜ்ஜாவுக்குத் தெரியாமல் வீட்டில் வைத்து விட்டு எஜமானிடம் சென்று பணம் பறி போய் விட்டதாகச் சொன்னேன். அப்பொழுது எனக்கு அந்தத் தைரியம் எப்படி வந்ததோ, அது எனக்கே தெரியாது. அதை இப்பொழுது நினைத்துக் கொண்டாலும் எனக்கு வியப்பாயிருக்கிறது. எனது போலி நடிப்பைக் கண்டு என்னுடைய நண்பன் ஏமாந்து விட்டான். “என்ன செய்வது, எதற்கும் நீ போலீஸில் எழுதி வை!” என்றான்.

அன்றிரவு வீட்டுக்குச் சென்றதும் அஜ்ஜாவை அன்புடன் அழைத்து அவளது கரங்களில் வளையல்களை இட்டேன். அவள், “இந்த வளையல்களை வாங்க உங்களுக்குப் பணம் ஏது?” என்று வியப்புடன் கேட்டாள்.

“உனக்குத் தெரியாமல் இத்தனை நாட்களாகச் சேர்த்து வைத்திருந்தேன்” என்று நான் அப்பொழுது பொய் சொன்னேன். கடைசி வரையில் நான் அந்தப் பொய்யை வெளிப்படுத்தாமலே இருந்திருக்கக் கூடாதா?

அன்று இரவு அவள் தலை குனிந்தபடி என் அருகில் உட்கார்ந்திருந்தாள். நான் மனங்கனிந்து மெல்ல அவளது முகவாய்க் கட்டையைத் தொட்டு, அவளுடைய தலையை நிமிர்த்த முயன்றேன். அப்போது தன் மிருதுவான கரங்களால் அவள் எனது கையைத் தட்டிவிட்டு முல்லைச் சிரிப்புச் சிரித்தாள். அந்தச் சிரிப்பின் களிப்பிலே என்னை மறந்து நான் வளையல் வாங்க எனக்குப் பணம் கிடைத்த உண்மையை சொல்லி விட்டேன். அதே மூச்சில் ‘விர்’ரென்று மண்டிக்கு கிளம்பாமல் சிறிது நேரம் வீட்டிலேயே இருந்திருந்தால், நான் சொன்னதைக் கேட்டு அவளது முகம் திடீரென்று மாறுதல் அடைந்தததைப் பார்த்திருப்பேன் என்பது எனக்குப் பிறகுதான் தெரிந்தது?

* * *