பக்கம்:விந்தன் கதைகள் 2.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

442

விந்தன் கதைகள்

"கவலைப்படாதீர்கள்; முப்பது அடிக்குக் குறையாது!"

"நீளம்?"

"நாற்பத்து நான்கு அடி இருக்கலாம்........"

"ஐயையோ! கண்ணே போய்விடுமாமே?"

"ஆபத்துத்தான் கொஞ்சம் பொறுங்கள்; கையாலேயே அளந்து பார்த்து விடுகிறேன்!" என்று அளந்து பார்த்துவிட்டு, "சரியாக நாற்பத்திரண்டு!" என்றேன் நான்.

"சந்தோஷம்; அஷ்ட லக்ஷ்மிகளும் குடியிருப்பார்கள் என்பது சாஸ்திரம்!"

"எல்லா வகையிலும் ஆங்கில நடை, உடை பாவனைகளைப் பின்பற்றும் நீங்கள், நமது சாஸ்திரத்தில் இவ்வளவு தூரம் நம்பிக்கை வைத்திருப்பீர்கள் என்று நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை!"

"நெற்றியில் 'நாம'த்தைப் போட்டுக்கொண்டு தலையில் 'ஹாட்'டையும் வைத்துக் கொள்கிறார்களே சிலர், அவர்களுடன் என்னையும் சேர்த்துக்கொள்ளுங்களேன்!" என்றார் அவர், சிரித்துக்கொண்டே,

நானும் பதிலுக்குச் சிரித்துக்கொண்டே கதவைத் திறந்தேன்.

"மாடிப்படி ஹாலிலேயே இருக்கிறதா, நல்லது தான்!"

"நல்ல வேளை, பின்பக்கம் இருந்தால் நன்றாக இருக்கும் என்று சொல்லாமல் இருந்தீர்களே?"

"தெற்குப் பார்த்தாற்போல் இரண்டு ஜன்னல்கள் வைக்கவே வைத்தார்கள்; அவற்றை இன்னும் கொஞ்சம் பெரிதாக வைத்திருக்கக் கூடாதோ?"

"வைத்திருக்கலாம்; அப்புறம்?"

"மெட்ராஸ் டெர்ரஸுக்குப் பதில் பாம்பே டெர்ரஸ் போட்டிருந்தால் இந்த மரங்கள் கண்ணை உறுத்தாது!"

"ம், அப்புறம்?"

"இன்னும் எத்தனையோ குறைகள்; இருந்தாலும்......"

இந்தச்சமயத்தில் அவருடைய குழந்தை விண்ட்டெர் ஓடி வந்து, "அப்பாப்பா! எனக்கு வீடு ரொம்பப் பிடித்துப் போய்விட்டது,