பக்கம்:விந்தன் கதைகள் 2.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

472

விந்தன் கதைகள்

காரணம் அதுவாயிருந்தாலும் காரியம் என்று ஒன்றும் இருக்கத்தான் இருந்தது. அந்தக் காரியம் வேறொன்றுமில்லை; ஒரு சிட்டிகை ஓசிப் பொடி!

முதலில் அதை வாங்கிப் போட்டுக்கொண்டு, "எப்பொழுது கேட்டாலும் 'என்னமோ இருக்கிறேன்!' என்பதுதானா? அப்படி என்ன குறைச்சல் ஐயா, உமக்கு?" என்று கேட்டார் சின்னண்ணா.

"என்னத்தைச் சொல்வது, போங்கள்! என்னுடைய பையனைப்பற்றியோ கேட்கவே வேண்டாம். அவனிடம் யாராவது வந்து, 'என் அப்பா எனக்கு இதை வைத்துவிட்டுப் போனார், அதை வைத்து விட்டுப் போனார்' என்று அளந்தால் போதும்; 'என் அப்பாவும் என்னை அப்படி யொன்றும் வெறுங்கையுடன் விட்டு விட்டுப் போவதாக இல்லை; திவசம் வைத்து விட்டுப் போகப் போகிறார், திவசம்' என்று என் காதில் விழும்படிச் சொல்கிறான்!" என்றார் பெரியண்ணா , அழாக் குறையாக.

"சரி, விடும். நீரும் நானும் அதைத் தவிர வேறு என்னத்தை வைத்து விட்டுப் போகப் போகிறோம்?" என்றார் சின்னண்ணா அலட்சியமாக.

"அவன்தான் அப்படியென்றால் அவனுக்கென்று வந்து வாய்த்த மனைவிக்கோ நான் ஒரு வத்தல்!"

"வத்தலா!"

"ஆமாம்; வாசலில் வத்தலைக் காய வைத்து விட்டு, அந்த வத்தலோடு வத்தலாக என்னையும் வெய்யிலில் காய வைத்து விடுகிறாள் அவள்! எனக்கென்ன கண்ணா தெரிகிறது, காக்காயை விரட்ட?"

"அந்த விஷயத்தில் மட்டும் நீர் கொஞ்சம் ஜாக்கிரதையாயிரும்; உம்மையும் வத்தலென்று நினைத்துக் காக்காய் கொத்திக்கொண்டு போய்விடப் போகிறது!"

"இந்த வீட்டில் எது நடக்கும், எது நடக்காது என்றே சொல்வதற்கில்லை, காலையில் பாருங்கள், 'இங்கே உட்கார்ந்து கொட்டாவி விட்டுக் கொண்டிருப்பதைவிட, அங்கே வந்து உங்களுடன் பேசிக் கொண்டாவது இருக்கலாமே?' என்று நினைத்தேன். இப்பொழுதெல்லாம் நினைத்தால் நினைத்தபடி வந்து விட முடிகிறதா? கண்தான் தெரியவில்லை யென்றால், காலுமல்லவா