பக்கம்:விந்தன் கதைகள் 2.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

334

விந்தன் கதைகள்

குழந்தை ஆனந்தமாக அழுவதற்கு அரைமணிநேரம் 'சான்ஸ்' கொடுக்கக் கூடாதோ?" என்பான் நாராயணன்.

என்றைக்காவது ஒருநாள் என் அருமைப் பெண்ணைப் பற்றி நான் பேச்சோடு பேச்சாக, "சுதா, சுவரைத் துணையாகக் கொண்டு நடக்க ஆரம்பித்தாலும் ஆரம்பித்தாள். என் அறையில் வைத்தது வைத்தபடி ஒன்றுமே இருப்பதில்லை!" என்பேன்.

உடனே, தன் மேஜை மீது ஒழுங்காக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் புத்தகங்களைப் பார்த்து நாராயணன் பெருமூச்சு விடுவான். லக்ஷ்மி சமையலறையில் எல்லாம் வைத்தது வைத்தபடி இருப்பதைப் பார்த்துவிட்டுச் சோகமே உருவாய்ச் சுவரோடு சுவராகச் சாய்ந்து விடுவாள்.

அவர்கள் போகாத கோயில்களில்லை; ஆடாத தீர்த்தங்களில்லை; தரிசிக்காத தெய்வங்களில்லை; வலம் வராத மரங்களில்லை; அனுஷ்டிக்காத விரதமில்லை/ என்ன இருந்தும் என்ன பயன்? - 000!

ப்பாடி! ஒரு வழியாக அந்த இளந்தம்பதிகளுடைய எண்ணம் ஈடேறுவதற்கு எட்டாவது வருஷமும் பிறக்க வேண்டுமென்று இருந்தது போலும்? "வெந்நீர் போட்டு விட்டேன்!", "காப்பி தயார்!", "இலை போட்டாச்சு!" என்றெல்லாம் இத்தனை நாளும் லக்ஷ்மியே முன்வந்து நாராயணனை அழைத்தது போக, இப்பொழுது நாராயணனே முன்வந்து "வெந்நீர் போட்டாச்சா?" "காப்பி தயாராகிவிட்டதா?" "இலை போட்டாச்சா?" என்றெல்லாம் விசாரிக்கும்படியாகிவிட்டது.

முன்னெல்லாம் "லக்ஷ்மி!" என்று ஒருமுறை கூப்பிட்டாலும் போதும், "ஏன்?" என்று எங்கே யிருந்தாலும் அவள் சிட்டாய்ப் பறந்து ஓடி வருவாள். இன்று அப்படியில்லை. "லக்ஷ்மி, லக்ஷ்மி!" என்று லக்ஷோபலக்ஷம் தடவை அடித்துக் கொண்டாலும் "உம்,உம்" என்ற முனகலைத் தவிர அவனால் அவளை நேரில் பார்க்க முடியவில்லை.

"இதென்ன வம்பு!" என்று அலுத்துக் கொண்டே நாராயணன் எழுந்து உள்ளே போவான்.

அவள் எண் சாண் உடம்பையும் ஒரு சாண் உடம்பாக ஒடுக்கிக் கொண்டு எங்கேயாவது ஒரு மூலையில் படுத்துக் கொண்டிருப்பாள்.