பக்கம்:விந்தன் கதைகள் 2.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
ஐந்தாண்டுத் திட்டம்


மூடியிருந்த 'ரயில்வே கேட்'டுக்கு முன்னும் பின்னும் மத்திய சர்க்காரை மீறி ஒன்றும் செய்ய முடியாத மாகாண சர்க்கார்களைப் போலச் சகல வண்டிகளும் நின்று கொண்டிருந்தன; சகல மக்களும் நின்று கொண்டிருந்தார்கள்.

அப்போது 'பாம், பாம்' என்று குரல் கொடுத்துக் கொண்டே வந்த லாரி நம்பர் 3636, "இங்கே ஒரு மேம்பாலம் எப்பொழுது தான் கட்டித் தொலைக்கப் போகிறார்களோ!" என்று பெருமூச்சு விட்டுக் கொண்டே நின்றது.

"கவலைப்படாதீர்; அடுத்த ஐந்தாண்டுத் திட்டத்துக்குள் அவசியம் கட்டிவிடுவார்கள்!" என்றது அதற்கு முன்னால் நின்று கொண்டிருந்த கார் நம்பர் 4545.

இதைக் கேட்டதும் "நீங்கள் நாசமாய்ப் போக!" என்று சாபம் கொடுத்தது, அவற்றுக்கு அருகே நின்று கொண்டிருந்த ஒரு கைவண்டி.

"யாரது, வண்டியப்பரா? பாவம், அவர் என்ன செய்வார்? மேம்பாலத்தின் மேல் ஏறும் போதும் கஷ்டம், இறங்கும் போதும் கஷ்டம், அவருக்கு!" என்றது முப்பத்தாறு முப்பத்தாறு.

"ஒருவர் கஷ்டப்படுவாரே என்பதற்காக உலகத்தில் உள்ளவர்களெல்லாம் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்க முடியுமா என்ன?"

"முடியாது, முடியாது அதற்கு நாம் தயாராயிருந்தாலும் நம்முடைய எஜமானர்கள் தயாராயிருக்கமாட்டார்கள் ஏனெனில் அவர்கள் மனிதர்கள்; நாமோ இயந்திரங்கள்"

"மேலும்..."

"சொல்லுங்கள், சொல்லுங்கள்?"

"வண்டியப்பர் எப்போதும் வண்டியப்பராகவே இருந்து விடப் போகிறாரா, என்ன? நமது சர்க்கார் நாட்டை முன்னேற்றிக் கொண்டிருக்கும் வேகத்தைப் பார்த்தால் நாளைக்கே அவரும் உம்மைப் போல் லாரியப்பரானாலும் ஆகிவிடுவார், இல்லையா?" என்றது நாற்பத்தைந்து நாற்பத்தைந்து.