பக்கம்:விந்தன் கதைகள் 2.pdf/277

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கண்டெடுத்த நாட்குறிப்பிலிருந்து......

595

என்று இன்னொரு சாராரும் தொண்டை கிழியக் கத்திக் கொண்டே கலைந்து சென்றனர்!

ஆம், அவர்களுடைய நினைவில் இப்போது அந்தத் தமிழ் மாறனும் இல்லை; அவனைப் பெற்றெடுத்த தாயும் இல்லை; தமிழ்ப் புயல் தயாநிதிதான் இருந்தார்!

அதற்குமேல் அங்கென்ன வேலை எனக்கு? "வாழ்க, தமிழ் மக்கள்!" என்று நான் அவர்களை வாழ்த்திக்கொண்டே திரும்பினேன் - எனக்கே உரிய வயிற்றெறிச்சலுடன்தான் வேறு என்ன செய்ய?

27 ஜனவரி 1966

இதெல்லாம் அன்று; இன்றோ ?.....

இன்னுயிரை மட்டுமல்ல; பொன்னுடலைக் கூடத் தீக்கு இரையாக்காமலே 'தியாக முத்திரை' குத்திக் கொண்டு சிறையை விட்டு வெளியே வந்திருக்கும் தமிழ்ப்புயல் தயாநிதி, தீக்குளித்த தமிழ் மாறனின் படத்தை வண்ணப் படமாகத் - தீட்டிக் கொண்டிருக்கிறார்! நாளை அது சந்திக்குச் சந்தி நிற்கலாம்; அதற்குக் கீழே "இந்த இளவலைத் தீயிட்டுக் கொன்ற இந்தி வெறியர்களுக்கா உங்கள் ஓட்டு? வையுங்கள் வேட்டு" என்பது போன்ற வாசகங்களும் காணப்படலாம். அதன் பயனாகத் தமிழ்ப் புயல் தயாநிதி சட்டசபை உறுப்பினராகலாம்; சபாநாயகராகலாம்; அமைச்சராகக் கூட ஆகலாம்...

அதற்குப்பின் சர்க்கார் செலவில் தமக்குக் கிடைக்கப் போகும் இலவசக் கார், இலவச பங்களா, இலவச எடுபிடி ஆட்கள், இலவசப் பிரயாணம், இன்னும் 'இலை மறைகா'யான இதர இதர, இன்னபிற இன்னபிற சுக சௌகரியங்கள் ஆகியவை குறித்து அவர் இன்றே, இப்போதே 'இனிய பல கனவு'களும் காணலாம்...

ஆனால், என் அருமை நண்பன் தமிழ் மாறனைப் போன்றவர்கள்?

'வெறி'யால் வீழ வேண்டியதுதானா? அந்த வெறிக்கு அவர்களை ஆளாக்கும் ‘நர மாமிச பட்சிணிகள்' தங்கள் 'நயம் மிக்க அறி'வால் வாழ வேண்டியது தானா?

இது என்ன வெறி, இது என்ன நெறி?