பக்கம்:விந்தன் கதைகள் 2.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



வேதாந்தம்

361

தள்ளிவிடும். அவர்கள் கொடுக்கும் காசை கல்லாவில் போட்டுவிடாதீர்; அடுத்தாற்போல் இருக்கும் நம் மளிகைக் கடை குமாஸ்தாவிடம் கொடுத்துவையும்-என்ன, தெரிகிறதா?”

"தெரிகிறது, தெரிகிறது!"

"திடீர் திடீரென்று சர்க்கார்பயல்கள் வந்து, 'தாம்'. 'தும்’ என்பான்கள்; கணக்குப் புத்தகத்தை எடு; கல்லாவை விட்டு எழுந்திரு. அரிசியை அளந்து காட்டு, என்றெல்லாம் குதிப்பான்கள்-நீர் மிரண்டுவிடாதீர்! ஒரு புன் சிரிப்பை அலட்சியமாக வீசி அவர்களை உட்காரவையும்; உடனே பையனை ஹோட்டலுக்கு அனுப்பும். அந்தப் பயல்கள் நாக்கைச் சப்புக் கொட்டிக்கொண்டு உட்கார்ந்திருப்பான்கள். நீர் பாட்டுக்கு உம் வேலையை தொடர்ந்து பாரும்!"

இந்தச் சமயத்தில் கோபாலசாமியின் முகத்தில் ஒரு புன்னகை அரும்பி மறைந்தது. அந்தப் புன்னகையைக் கண்ட கருப்பையா, "ஹா இப்போது சிரித்தீரே-இந்தச் சிரிப்பே போதும், அந்தப் பயல்களை உட்கார வைக்க" என்று துள்ளிக் குதித்துக் கொண்டே சொன்னார்.

கோபாலசாமி நூறுரூபாய் பணத்தை எடுத்துச்சட்டைப்பையில் வைத்துக் கொண்டான். 'பத்திரம், பத்திரம்' என்று சொல்லிக்கொண்டே கருப்பையா சாவிக் கொத்தை அவனிடம் கொடுத்தார்.

கோபாலசாமி புறப்பட்டான்.

கறார் கருப்பையா தம்முடைய காலைக்கடன்களை யெல்லாம் முடித்துக் கொண்டு கடைக்குப் புறப்பட்ட போது யாரோ ஒரு ஆள் ஓடோடியும் வந்து, "நல்லமுத்து போயிட்டாருங்க!" என்றான்.

இந்த துக்கச் செய்தி கருப்பையாவை தூக்கிவாரிப் போட்டது. நல்லமுத்து அவரது அத்தியந்த நண்பர்களில் ஒருவர்; பக்கத்துக் கடைக்காரர்; அத்துடன் எதிர் வீட்டுக்காரர்; அவரும் அரிசி ரேஷன் கடைதான் வைத்திருந்தார்; சர்க்காரைத் திட்டும் விஷயத்தில் சந்தர்ப்பம் வாய்க்கும் போதெல்லாம் அவரும் கருப்பையாவுடன் ஒத்துழைத்து வந்தார். அத்தகையவருடைய பிரிவை கருப்பையாவால் எவ்வாறு சகித்துக் கொள்ள முடியும்?- அனுதாபம் ஒரு புறம்: ஆத்திரம் ஒரு புறம்-ஆத்திரம் நல்லமுத்துவின் மீது அல்ல, சர்க்காரின் மீதுதான்!