பக்கம்:விளையாட்டுத்துறையில் சொல்லும் பொருளும்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விளையாட்டுத் துறையில் சொல்லும் பொருளும்

72


எக்சிபிஷன் என்றவுடனேயே ஒவியக் கண்காட்சி, மற்றும் புத்தகக் கண்காட்சி போன்றவைகள் தான் நினைவுக்கு வருகின்றனவே ஒழிய, விளையாட்டுக் காட்சிகள் உடனே வருவதில்லை.

என்றாலும், எப்பொழுதோ ஒரு சில நேரங்களில் உலகப் புகழ் பெற்ற வீரர்கள், விளையாட்டு ரசிகர்களின் ஆசைகளைப் பூர்த்தி செய்வதற்காக, காட்சிப் போட்டிகளில் விளையாடுகின்ற நிகழ்ச்சிகள் நடைபெறுவதுண்டு. அப்படி நிகழ்ச்சிகள் நடைபெற்றாலும் கூட, எக்சிபிஷன் என்ற சொல் வேறு துறைக்குப் பொருந்தி வருவது போல, விளையாட்டு துறையுடன் வரவில்லை என்பதே உண்மை நிலையாகும்.

ஆனாலும், திறமைகளை வெளிப்படுத்திக் காட்டும் உணர்வுக்கு விளையாட்டுத்துறை சளைத்ததில்லை என்பதை மட்டும் அறிந்து கொண்டால் போதுமானதாகும்.

29. NOVICE

Novice என்ற ஆங்கிலச் சொல்லுக்குப் புது மாணவர், வேலை பயிலுபவர் என்பதாகப் பொருள் கூறப்படுகிறது.

Novice என்ற இந்த சொல், பிரேஞ்சுச் சொல்லான novice எனும் சொல்லிலிருந்துதான் வந்திருக்கிறது, உச்சரிப்பு மட்டுமல்லாது, எழுத்துக்களும் ஒன்றாக இருப்பதையும் நாம் இங்கே காணலாம்.