பக்கம்:விளையாட்டு உலகம்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

எஸ். நவராஜ் செல்லையா

21

ஆர்வத்தோடு பார்த்தார்கள். கைதட்டினார்கள். ஆச்சரியத்துடன் அருகே சென்று பாராட்டினார்கள்.

துப்புரவுப் பணியாற்ற அணிந்திருந்த கனமான காக்கி ஆடைகள். கனமான காலணிகள். களைத்த உடல். முன்பின் தாண்டிய பழக்கம் இல்லாத தன்மை. இத்தனையையும் வைத்துக்கொண்டு தாண்டிய அந்த இளைஞனைப் பார்க்க ஓடிவந்தவர்களில் பயிற்சியாளரும் ஒருவர். அவர் பெயர் வார்னர்.

வார்னர் அந்த இளைஞனை வாஞ்சையுடன் விசாரித்தார். அவனும் தன் வரலாற்றைக் கூறினான்.

அமெரிக்கப் பகுதியில் காடுகளில் வாழும் ‘சாக்ஸ் அண்ட் பாக்ஸ்’ எனும் செவ்விந்திய பரம்பரையைச் சேர்ந்தவன், கார்லைல் எனும் நகருக்குத் தொழிற்கல்விப் பயில வந்தவன். அங்கு தையற் தொழிலைக் கற்றுக்கொள்ளும் போதே, மாற்று வேலையாக விளையாட்டு மைதானத்தைத் துாய்மைப்படுத்தும் வேலையையும் செய்வதாகக் கூறினான். தன் பெயரை ஜேம்ஸ் பிரான்சிஸ் தோர்ப் என்றும் கூறினான்.

வார்னரோ விலைமதிக்க முடியாத மாணிக்கத்தைக் கண்டெடுத்தவர்போல் மகிழ்ந்தார். அவனது இளம் வயது காலத்திய சாதனையை அறிந்தபோது, மேலும் அவர் வியப்பில் ஆழ்ந்து போனார். ஓடுவது, மீன் பிடிப்பது, வேட்டையாடுவதுதான் ஜேம்ஸ் தோர்ப்பின் குடும்பத் தொழில். அவனோ தன் பெற்றோர்களையும் மிஞ்சிய வீரச் சிறுவனாக விளங்கினான்.

மூன்று வயதிலேயே குதிரை சவாரி செய்யும் ஆற்றல், பத்து வயதில் காட்டு மானை விரட்டிப்