பக்கம்:விளையும் பயிர்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விளையும் பயிர்


தெரியாமல் போயின. இருக்கும் இடம் தெரியாமல் அந்தத் தமிழ் நூல்கள் மறைந்திருந்தன. அந்தப் பாடல்களைத் தமிழ்த் தாத்தா கண்டுபிடித்தார். புதையல் எடுப்பதுபோல எடுத்து, சுத்தமாக்கி அச்சிட்டுத் தந்தார். அந்தப் புத்தகங்களைப் படித்துப் பார்த்த போது எத்தனை புதிய விஷயங்கள் தெரிந்தன! புதிய விஷயங்கள் என்று சொல்லக்கூடாது; பழைய விஷயங்களே. பல காலமாகத் தெரியாமல் மறைந்திருந்ததால் புதுமையாக இருந்தன.

தமிழ்நாட்டில் அந்தக் காலத்தில் இருந்த அரசர்களைப்பற்றி அந்த நூல்கள் பல கதைகளைச் சொல்லுகின்றன. பல புலவர்களைப் பற்றித் தெரிந்துகொள்ளுகிறோம். ஜனங்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்று அறிகிறோம். பழைய ஊர்கள், பழைய சபைகள், பழைய நாகரிகம் இன்னும் எத்தனை எத்தனையோ விஷயங்களை நாம் தெரிந்துகொள்ளுகிறோம்.

1855-ஆம் வருஷம் பிறந்து 88-வருஷ காலம் தமிழ்த் தாத்தா வாழ்ந்தார். பெரிய கவிஞராகிய மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களிடம் பாடம் கேட்டார். அவரும் மகா வித்வான் ஆனார். கும்பகோணம் காலேஜிலும் சென்னைப் பிரஸிடென்ஸி காலேஜிலும் தமிழ் ஆசிரியராக இருந்தார். எத்தனையோ பேர்களுக்கு வீட்டிலும் பாடம் சொல்லிக்கொடுத்திருக்கிறார்.

அவர் முதல் முதலில் சீவகசிந்தாமணி என்ற புத்தகத்தை அச்சிட்டார். பத்துப் பாட்டு, புறநானூறு முதலிய அருமையான நூல்களை அவர் பதிப்பித்திருக்கிறார். அவருக்கு இங்கிலீஷ் தெரியாது. ஆனாலும் மேல்நாட்டில் பல பெரிய ஆராய்ச்சிக்காரர்களெல்லாம் அவர் செய்த ஆராய்ச்சியைப் பாராட்டினார்கள். நூறு புத்தகங்களுக்கு மேல் வெளியிட்டிருக்கிறார்.

அவர் கதைகளையும் கட்டுரைகளையும் எழுதியிருக்கிறார். இவ்வளவு படித்த அவர் உங்களுக்குக்கூடப் புரியும்படி தெளிவான நடையில் எழுதியிருக்கிறார் நடந்த விஷயங்களைக் கதைபோலச் சொல்வதில் அவர் மிகவும் கெட்டிக்காரர். பண்டிதர்களுக்கெல்லாம் பெரிய பண்டிதர். ஆனாலும் குழந்தைகளுக்கும் விளங்கும்படி பேசுவார்; எழுதுவார்.

அவர் தம்முடைய சரித்திரத்தை விரிவாக எழுதியிருக்கிறார். முழுதும் எழுதி முடிக்கவில்லை. அதற்குள் அவர் வாழ்வு முடிந்தது.


20