பக்கம்:விளையும் பயிர்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விளையும் பயிர்


"தாத்தா அப்படித்தான் சொன்னார்” என்பார் குழந்தை. "சரி, சரி, மறுபடியும் போய்க் கேட்டுவிட்டு வா' என்று அனுப்புவார்.

பேரர் தாத்தாவிடம் மறுபடியும் போவார். "என்ன செய்ய வேண்டும்?" என்று கேட்பார். நிதானமாக, "கத்திரிக்காய் இருக்கிறதா?" என்று கேட்பார்.

மறுபடியும் சாமிநாதையர் அம்மாவிடம் போவார். "கத்திரிக்காய் இருக்கிறதா?” என்ற கேள்வியை ஒப்பிப்பார். "இருக்கிறது" என்று தாயார் சொல்வார். அங்கிருந்து தாத்தாவிடம் வந்து, "இருக்கிறது" என்பார்.

"சரி. அந்தக் கத்திரிக்காயைச் சுட்டுவிட்டு ... என்ன, தெரி கிறதா?" என்று தாத்தா ஆரம்பிப்பார்.

"ஹூம்" என்று கேட்பார் பேரர்.

"அதைச் சுட்டுவிட்டு அம்மியில் வைத்து......என்ன, கேட் கிறதா?"

"ஹூம்."

"கத்திரிக்காயை அம்மியில் வைத்து ஓட்டி ஓட்டி ஓட்டி ஓட்டி...."

ஓட்டி ஓட்டி அரைப்பதை அவர் ஓட்டிக்கொண்டே போவார்.

அதை அப்படியே அம்மாவிடம் போய்ச் சொல்வார் குழந்தை. மறுபடியும் தாத்தா கூப்பிடுவார். கத்திரிக்காய்த் துவையலை எப்படிச் செய்ய வேண்டும் என்பதைச் சாங்கோபாங்கமாகச் சொல் வார். இந்த மாதிரி கத்திரிக்காய்த் துவையல் விஷயத்தைத் தாத்தாவிடம் கேட்டு அம்மாவுக்குச் சொல்வதால் எல்லாரும் அவரைக் "கத்திரிக்காய்த் துவையல்" என்று அழைக்க ஆரம்பித்தார்கள்.

தமிழ்த் தாத்தாவின் தகப்பனார் சங்கீத வித்வான். அதனால் சாமிநாதையரும் சங்கீதம் கற்றுக்கொண்டார். சின்ன வயசிலேயே கவிபாடுவார். அங்கங்கே உள்ள தமிழ்ப் புலவர்களிடம் அவர் தமிழ் படித்தார். அந்தப் புலவர்களில் ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு நூல் தெரியும். அவரவர்களுக்குத் தெரிந்தவற்றைக் கற்றுக்கொண்டார். கடைசியில் மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை என்னும் பெரிய கவிஞரிடம் பாடம் கேட்க ஆரம்பித்தார்.


22