உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வீரர் உலகம்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

118

வீரர் உலகம்

சேனாபதி செல்கிறான். அவன் கையிலே வேல் இருக்கிறது. அதன் தலையிலே வேப்ப மாலையைக் கட்டியிருக்கிறார்கள். பாண்டிய மன்னனது சேனைத் தலைவன் அல்லவா? சேனாபதி ஒவ்வொரு கூடாரமாகப் புகுந்து வீரர்களை இன்னார் இன்னார் என்று அரசனுக்குக் காட்டுகிறான்.

பாசறை நடைபாதைக்கு அருகில் குதிரைகளைக் கட்டியிருக்கிறார்கள். சேணம் முதலியவற்றைக் கழற்றாமல் அப்படி அப்படியே நிறுத்தியிருக்கிறார்கள். மழைத்துளிகள் தம் மேலே பட்டவுடனே குதிரைகள் அவற்றை உதறுகின்றன. இந்தத் தெரு வழியே அரசன் செல்கிறான். அவன் தன்மேலே மெல்லிய மேலாடையைப் போட்டுக் கொண்டிருக்கிறான். அது நழுவுகிறது. நழுவ நழுவ அதை இடக்கையினால் இடுக்கிக் கொள்கிறான். அவன் பக்கத்திலே அவனுடைய மெய்காப்பாளன் தன் தோளிலே வாளைத் தொங்க விட்டுக்கொண்டு வருகிறான். அவனுடைய தோளில் வலக்கையை வைத்துக்கொண்டு நடந்து வருகிறான் அரசன். முத்துமாலையையுடைய வெண் கொற்றக் குடையை மழைத் துளிக்குப் பாதுகாப்பாக ஒருவன் பிடித்துக்கொண்டிருக்கிறான். புண்பட்ட வீரர்களைக் கண்டு இன்சொல் கூறும்பொருட்டு இனிய முகத்தோடே செல்லுகிறான் அரசன்.

நேரம் நடு இரவு. மேலே மழை, கீழே ஈரம். இந்தக் குளிரிலும் நள்ளிருளிலும் அரசன் தூங்கவில்லை. தன் மனைவியையும் நினைக்கவில்லை. தன் பாசறையில் வீரர்களைக் கண்டு முகமலர்ந்து பாராட்டி ஊக்கம் உண்டாக்கும் வேலையிலே அவன் முனைந்து நிற்கிறான்.

“அத்தகைய அரசன் போரில் வெற்றி பெறுவானாக!” என்று வேண்டிக்கொள்ளும் முறையில் நெடுநல் வாடை அமைந்திருக்கிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரர்_உலகம்.pdf/125&oldid=1848358" இலிருந்து மீள்விக்கப்பட்டது