18. பின்னுரை
153
தகடூர் யாத்திரை, புறநானூறு, பதிற்றுப்பத்து, பெரும்பொருள் விளக்கம், வெண்பாமாலை முதலிய நூற்செய்யுட்களை அவர் உரைகளில் காணலாம். இவற்றில் பெரும்பொருள் விளக்கமென்பது. புறப்பொருள் வெண்பாமாலையைப் போலப் புறப்பொருள் துறைகளுக்கெல்லாம் இலக்கிய மான செய்யுட்களை உடையதென்று தோற்றுகின்றது. அந்த நூல் இப்போது கிடைக்கவில்லை. அவர்கள் காட்டும் இராமாயண பாரதங்களும் மறைந்தொழிந்தன. தகடூர் யாத்திரையும் இல்லை. முன்னே சொன்னதுபோல புறப்பொருள் துறைகளின் இலக்கணத்தை ஆராய்வார். வரவரக் குறைந்து போகவே அத் துறைகளே எண்ணிப் பிற்காலத்தில் இலக்கியம் படைப்பவர்களும் குறைந்து போயினர்.
புறப்பொருள் இலக்கண இலக்கியங்களை ஆராய்ந்தால் வீரத்தைத் தமிழ்ப் புலவர்களும் மன்னர்களும் எவ்வாறு பாராட்டிப் போற்றி வந்தார்கள் என்பது தெளிவாகும். புறநானூறும் பதிற்றுப்பத்தும் அந்த வீரச் செயல்களைக் காட்டும் வரலாற்றுப் பெட்டகங்களாக நிலவு கின்றன. அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கு உறுதிப் பொருள்களிலும் இன்பத்தைக் கூறுவது அக மென்றும், ஏனேய மூன்றையும் கூறுவது புறமென்றும் சொல்வர். ஆயினும் புறப்பொருளில் உள்ள திணைகளையும் துறைகளையும் பார்த்தால் பெரும்பாலும் வீரச் செயல்களின் கூறுபாடுகளே ஆராய்வதே புறமென்பதை உணரலாம்.
வீரச் செயல்கள் பல நிகழ்ந்த தமிழகத்தில் அவற்றைப் புலவர்கள் சிறப்பித்துப் பாடினார்கள். அவ்வாறு எழுந்த இலக்கியத்துக்குப் புலவர்கள் இலக்கணம் அமைத்தார்கள். இந்த இலக்கணம் மிகமிகப் பழங்கால முதலே வழங்கி வருவதனால் அதற்குரிய இலக்