4. சிறந்த வீரம்
பெரும் போர் நடக்கின்றது. படை எடுத்து வந்த வேந்தனோடு எதிர் நின்று பொரும் மன்னன், வந்தவனுடைய படையின் வலிமையைப் பார்க்கிறான். வரவரத் தன்படை சோர்வடையும் என்பதை அவன் உணர்கிறான். எத்தனை காலம் போரிட்டாலும் வெற்றி தன் பக்கம் கிட்டாது என்பது உறுதியாக அவனுக்குத் தெரிகிறது. அப்போது வீண் பெருமையினால் போரை நிறுத்தமாட்டேனென்று சொல்லி மேலும் பொருதால் அவனுடைய படை அழியும்; நாடு அழியும். பணிய வேண்டிய இடத்தில் பணிதலும் நிமிர வேண்டிய இடத்தில் நிமிர்தலும் நல்ல மன்னனுக்கு இலக்கணம். போர் தொடர்ந்து நடைபெற்றால் குடிமக்கள் வீணே அழிந்தொழிவார்கள் என்ற உண்மையை முன்கூட்டியே தெளிந்து, போர் தொடுத்த அரசனோடு சமாதானம் செய்துகொள்வதும் அரச நீதியில் ஒரு வகை. பகையரசன் விரும்பும் திறையைக் கொடுத்து, போர் மேலும் நடவாமல் சந்தி செய்துகொள்ளும் அரசன், தன் குடிமக்களிடம் உள்ள கருணையால் அப்படிச் செய்கிறான். அப்படியின்றி முரட்டுத் துணிவினால், வருகின்ற கேட்டை மதியாமல் போர் செய்கிறவன் தன் பெருமையையும் உயிரையும் இழந்து, தன் நாட்டு மக்களைப் பெரிய அவல நிலையில் ஆழ்த்தி விடுகிறான்.
இவ்வாறு பகையரசன் திறை கொடுத்துச் சமாதானம் செய்துகொள்ள முந்தும்பொழுது, போர் தொடுத்த மன்னன், “இவனைப் பூண்டோடு ஒழித்துவிட்டுத்தான் திரும்புவேன்” என்பது வீரமாகாது. அது விலங்கினத்துக்கு வரும் வெறி போன்றது. ஆகவே அரச நீதியை