பக்கம்:வெற்றிக்கு எட்டு வழிகள்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

முன்னுரை

தனி மாந்தர்களுக்கோ நாடுகளுக்கோ அரசியல், சமுதாயச் சீரமைப்பின் ஊடாகவே மிகுதியான ஆக்கம் வர முடியும் எனப் பொதுவழக்காகக் கருதப்படுகின்றது. ஒரு நாட்டின் ஆக்கக் கூறாகத் தனி மாந்தர்கள் மேற்கொண்டொழுகுகின்ற ஒழுக்கம் நெறியானதாக இருக்காது. ஓர் இனத்தின் தனி மாந்தர்களிடையே ஒழுக்க நெறியினைக் குறித்த உயர்ந்த உற்றறிவு காணப்பெறின் சிறந்த அறமுறைகளும் சமுதாயச் சூழ்நிலைகளும் எப்போதும் அதைத் தொடாந்து வந்து சேரும். நன்னெறியை நாடிப் பின்பற்றிக் கைக்கொண்டொழுகுவதில் தளர்ச்சியும் சோர்வுமுடையவனாகி விடுகின்ற ஒரு மாந்தனுக்கோ ஒரு நாட்டிற்கோ இயற்றப்படுகின்ற எந்தச் சட்டமும் ஆக்கம் தேடித் தரவியலாது; ஏன், ஏற்படும் அழிவைக்கூட அது தடுக்க முடியாது.

ஒழுக்க அறநெறிகளே ஆக்கத்தின் அடிப்படையும், கால்கோளுமாகும். ஏனெனின், அவையே மேம்பாட்டின் உயிர்நிலை. அவை என்றென்றும் நிலைத்து நிற்கின்றன. நிலைத்து நிற்கும் மாந்தர் பண்புகள் அனைத்துமே அவற்றை அடிப்படையாகக் கொண்டு எழுப்பப்பட்டனவே. அவை இல்லையெனின் வலிமையில்லை; நிலைபேறில்லை, உண்மையான இயற்பொருளில்லை; மற்றவை எல்லாம் கடிந்தழியும் கனவுகளேயாம். ஒழுக்க விதிகளைக் காணுவதென்பது ஆக்கம், மேம்பாடு, மெய்ம்மை ஆகியவற்றைக் கண்டுவிட்டதாகும். ஆகவே, அதுவே வலிமையுடையவராகத் துணிவுடையவராக, மகிழ்ச்சி உடையவராக, தன்னுரிமையுடையவராக இருப்பதாகும்.

ஜேம்ஸ் ஆலன்