பக்கம்:வெற்றிக்கு எட்டு வழிகள்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வெற்றிக்கு எட்டு வழிகள்

 70


அது நாணத்தைத் தன்னுள் கொள்வதாகின்றது; எனினும் அது நாணயத்தைவிட மேம்பட்டதாகும். அதுவே மனித சமூகத்தின் முதுகெலும்பு. மனித நிறுவனங்களின் அடிப்படையும் அதுவே. அதன்றி நம்பிக்கையிராது. வாணிப உலகம் வீழ்ச்சியடையும் வகையில் தலைகீழாகக் கவிழ்ந்துவிடும்.

பொய்யன், மனிதன் அனைவரையுமே பொய்யர்கள் என்று எண்ணி அவர்களை அவ்வாறே நடத்துவதுபோன்று சால்புடைய மனிதன் பிற மனிதர் அனைவரையுமே நம்பிக்கையுடன் நடத்துகின்றான். இவன் அவர்களை நம்புகின்றான்; அவர்கள் இவனை நம்புகின்றனர். இவனுடைய தெளிவான கண்ணும், திறந்த கைகளும் திருட்டுத்தனமாகச் செல்லும் எத்தன் அவனுடைய எத்துமானத்தைத் தன்னிடம் கையாள முடியாதபடி அவனை அவமானப் படுத்திவிடுகின்றன. எமர்சன் வெகு அழகாகக் கூறியிருக்கின்றார்; “மனிதர்களை நம்பு, அவர்கள் தம் வாணிப விதிகள் அனைத்திலிருந்தும் உன் சார்பாக ஒரு விதி விலக்கைச் செய்வதாயினும், உன்னிடம் உண்மையுடனிருப்பர்”.

வியப்பு, ஊக்கம் இரண்டையும் உண்டு பண்ணுகின்ற தன்னை உணராத சிறப்பைச் சால்புடைய மனிதன் தன்னிடத்தே கொண்டிருக்கின்றான். சிறியவை, இழிந்தவை, தவறானவை இவற்றிற்கு மேம்படத் தன்னை உயர்த்திக் கொண்டபின்பு இக் கோழைமையான நேர்மைக் கேடுகள் அவன் முன்னிலையில் குழப்பத்தால் பதுங்கிச் செல்கின்றன. மிகவுயர்ந்த இந்த ஒழுக்கச் சிறப்புடன் உயர்ந்த ஆய் பண்புத் திறமும் ஒப்புக் காட்ட முடியாது.