பக்கம்:வெற்றிக்கு எட்டு வழிகள்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

73

ஜேம்ஸ் ஆலன்


காரணமாகவே அவர்கள் அதைக் கையாளுகின்றனர். நாணயமற்ற மனிதன் ஒழுக்க நெறியைப் பொறுத்த அளவில் அணுக்கப் பார்வைக் கோளாறு கொண்டவனேயாவான். இறுதியில் ஏற்படும் இழிவை எண்ணிப் பார்க்காமல் தனது பழக்கத்தின் உடனடி மகிழ்ச்சியைக் காணுகின்ற குடிகாரனைப் போன்று, அவன் நாணயமற்ற செய்கையின் “பெருத்த ஆக்கம்” போன்ற உடனடி விளைவைக் காணுகிறானேயன்றி அதன் இறுதி விளைவை எண்ணுவதேயில்லை. அத்தகைய செயல்கள் அதிகரித்துக் கொண்டே போகும் எண்ணிக்கை தனது குணவியல்பைத் தவிர்க்க முடியாத நிலையில் வீழ்த்தி விடுவதோடு, தன் காதுகளில் ஒலிக்கும் வண்ணம் தனது வாணிபம் அழிவினுள் கவிழ்ந்து வீழும் நிலைக்கும் கொணர்ந்துவிடும் என்பதை அவன் காணுவதில்லை.

தன் கீழ்ப் பணியாற்றுபவர்கள் பொய் மொழிந்து வாடிக்கைக்காரர்களிடம் தனது சரக்கைக் குறித்துத் தவறுதலாக எடுத்துக் கூறவேண்டுமென்று ஒரு வணிகன் வேண்டிக் கொள்வது ஐயப்பாடு, நம்பிக்கையின்மை, வெறுப்பு இவை தன்னைச் சுற்றிக் கைகள் கோத்து நிற்குமாறு செய்து கொள்வதாகும். அவனுடைய கட்டளைகளை நிறைவேற்றுகின்ற ஒழுக்க வலிமையற்றோர்கூட அவனது தூய்மையற்ற வேலையால் தம்மைக் கறைப்படுத்திக் கொள்கின்ற அதே வேளையில் அவனை எள்ளி நகையாடுவர். அத்தகைய நச்சுச் சூழ்நிலையில் வெற்றி நிலைத்து நிற்றல் எவ்வாறு கூடும்? அத்தகைய வாணிபத்தில் அழிவின் சாயல் ஏற்கனவே ஏற்பட்டிருக்கின்றது; அதனுடைய வீழ்ச்சியின் நாளும் குறிக்கப்பட்டு விடுகின்றது.