பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சோகமும் அசோகமும்

125

ஒடோடி வந்து உதயணன் மயக்கத்தைத் தீர்த்தனர். மயக்கம் தெளிந்த உதயணன், யூகி தனக்குச் செய்த பேருதவிகளைச் சொல்லிப் புலம்பினான். இளமையில் தானும் யூகியும் பழகிய உழுவலன்பு முறையைக் கூறிக் கதறினான். உருமண்ணுவா மெல்ல உதயணனை நெருங்கி ஆறுதல் கூறி அவனைத் தேற்றத் தொடங்கினான்.

யூகி இறந்தான் என்ற செய்தி அறிந்த பின்னர், உருமண்ணுவா எவ்வளவோ தேறுதல் கூறியும் உதயணன் ஆறாமல் எப்போதும் யூகியின் நினைவாகவே புலம்பிக் கொண்டிருந்தான். நாள்தோறும் தேய்பிறையைப் போலத் துயரால் வாடிவரும் உதயணனை, எவ்வாறு துன்பத்தை மறக்கச் செய்வது என்று உயிர் நண்பர் ஏதும் புரியாமல் இருந்தனர். அமைச்சரையும் மந்திரச் சுற்றத்தினரையும் கூட்டி அரசனின் அவலந்தீர என்ன செய்வது எனச் சிந்தித்தனர். உதயணன், யூகி இறந்த துன்பத்தைப் பொறுக்க முடியாமல் அரை உடலாக இளைத்துப் போய்விட்டான்.

கடைசியில் நண்பர் யாவரும் சேர்ந்து அவனுடைய துயர் தீர்க்கும் அந்தப் பொறுப்பும் உருமண்ணுவாவினாலேயே நிறைவேற்றப்பட வேண்டுமென்று அவனை வேண்டிக் கொண்டனர். உருமண்ணுவாவும் ஒப்புக் கொண்டனன். பலவகை இன்ப நுகர்ச்சிகள், பகை மன்னர்களோடு போர் புரிந்து வென்று அவர்கள் முடி வணங்கச் செய்தல், சிற்றரசர்களைத் திறை இடச் செய்தல், காடு சென்று விலங்குகளை வேட்டையாடுதல், இத்தகைய நிகழ்ச்சிகளில் சில திங்கள் இடைவிடாமல் உதயணனை ஈடுபடுத்தி யூகி இறந்த துயரை ஒருவாறு அவன் மறக்கும்படி செய்து வந்தான் உருமண்ணுவா. சிலமுறை வாசவதத்தையோடு உதயணனையும் பக்கத்திலுள்ள மலைச்சாரல் ஒன்றில் பொழில் விளையாட்டுக்கு அழைத்துச் சென்றும் வேறுபல நுகர்ச்சிகளில் ஈடபாடு கொள்ளச் செய்தும் துயர் மறக்கச் செய்துவிட்டான். இதன் பின்னர் உருமண்ணுவா, உதயணனுக்கு யூகியைப் பற்றிய நம்பிக்கை ஒன்றையும் உண்டாக்கிவிட வேண்டு