பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

துன்பத்தில் விளைந்த துணிவு

145

கடகங்கள் தந்தத்தில் செதுக்கி வைத்தாற்போல் இருந்த அவள் முன் கையை நினைவில் கொண்டுவந்து காட்டின. பல நிற வைரக் கற்கள் பொருத்தப் பெற்ற மோதிரங்கள் தாமரையின் நீண்ட இதழ்களைச் சுருட்டியதுபோல் காட்சியளித்த அவள் விரல்களின் நளினத்தை எண்ணச் செய்தன. தோளணிகள் மழுமழுவென்று முற்றி இழைத்த சந்தனக் கட்டைகள்போன்ற, ஆனால் பஞ்சுபோல் மெல்லியனவாகிய அவள் தோள்களை அறிமுகம் செய்தன. பவழமும் காசும் கோத்துச் செய்யப்பட்ட பாண்டில் என்னும் இடுப்பணியும் எட்டுவடங்களாகக் கோத்த விரிசிகை என்னும் மேகலையும் தத்தையின் இடையழகைத் தாமும் உதயணனுமுமே அறிய முடிந்த பெருமையை இழந்து விட்டதுபோல அவனை நோக்கி அல்லல் காட்டின. கிண் கிணிச் சிலம்பு முதலிய காலணிகள் என்றோ செய்த இன்ப ஒலிகளை அவன் நினைவிற் படரச் செய்தன. தாரும் தழையும் கண்ணியும் மாலையும் கொண்டு உன்னை அழகு செய்ய வந்தேன். நீயோ உனக்கு முன்புள்ள அணி கலன்களையே விட்டுச் சென்று விட்டாய் என்று பலவாறு பிதற்றி வாசவதத்தையைப் பற்றிய பழைய நினைவுகளில் ஆழ்ந்து கிடந்தான் உதயணன். யானை பிடிப்போர் இட்ட குழியில் தன் பெண் யானையைப் பறி கொடுத்த களிற்றைப் போல நீங்காச் சோகம் அவனை நிலையாக வாட்டிய வண்ணமிருந்தது. வாசவதத்தையின் அழகிய உடலை இழந்து விட்ட உதயணன் அவளுடைய அணிகலன்களிலிருந்து அவை முன்பு அணி செய்த ஒவ்வோர் அங்கமாக நினைத்துக் கூட்டிக் கற்பனையில் அவளை உருவாக்க முயன்றான்.

29. துன்பத்தில் விளைந்த துணிவு

ந்த நிலையில் உதயணனுடைய சோர்வு நோக்கி, அவன் நாட்டின்மேல் படையெடுத்து வரக் காத்திருக்கும் பகைவர்கள் கொண்டாட்டம் அடைந்தனர். ‘பகைகள் நம்மைச் சுற்றி நிலவுகிறபோது இவ்வாறிருப்பது நன்றன்று’

வெ.மு. 10