பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

156

வெற்றி முழக்கம் / நா. பார்த்தசாரதி

பேசிக் கொண்டு பிதற்றியவாறே சென்றான் உதயணன். மகத நாட்டு எல்லையை அவர்கள் நெருங்கிக் கொண்டிருந்தனர். உதயணனை இனியும் அவ்வாறு பிதற்றவிடுவது கொண்டிருக்கும் மாறுவேடத்திற்கும் காண்போர்க்கும் பொருந்தாது என்பதை உணர்ந்த நண்பர், அவனை ஆற்றித் தன்நிலைக்குக் கொணர்ந்தனர். உதயணனும் தன் நிலையுணர்ந்து, துயரங்களை அடக்கிக் கொள்ள முயன்றான். சூழ்ந்திருந்த இடம் அவனை அவ்வாறு செய்யத் தூண்டியது.

மகத நாட்டின் எல்லைக்குள் புகுந்தபின் உதயணன் முதலியோர் எல்லோரும் கூட்டமாக ஒரே வழியிற்செல்லாது தனித்தனியே பிரிந்து சென்றனர். முடுக்கு வழிகளில் மறைந்து செல்வது ஐயப்படுவதற்குரிய செயலாகும் என்றுணர்ந்து அவர்கள் அகன்ற பெருஞ்சாலைகளின் வழியாகவே நடந்து போயினர். அங்கனம் போகும்போது இடையிடையே உதயணனைத் தேற்றுவதற்காக எவ்வளவோ கற்பனைகளைக் கூறி நாடகமாக நடித்து அவனைத் தளர்வடையாமல் அழைத்துச் சென்றனர் நண்பர்கள். மகத நாடு இயற்கை வளஞ் சிறந்தது. முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல், பாலை என்னும் ஐந்திணைக்குரிய நிலங்களும் அங்குண்டு. வீட்டுலகத்தைப் போன்ற பழமையும் சிறப்பும் பொருந்தியது மகதநாடு. ஒழுக்கத்தால் மேம்பட்ட தவத்தோர் பலரை யுடையது. என்றும் குன்றாத புகழும் பெருமையும் படைத்தது. உலகிற்கு ஒரு திலகம் போன்றது என அதனைப் புகழ்ந்து கூறுவது வழக்கம். அந்நாட்டில் செல்வக் குடிகள் மிகுந்திருந்தன. வறுமையாளரைத் தேடினாலும் அங்கே காணமுடியாது. இத்தகைய மகத நாட்டிற்குத் தலைநகரமாக விளங்கியது இராசகிரிய நகரம். ஆறும் குளமும் பொய்கையும் அருமையான பூஞ்சோலைகளுமாகக் காணப் பசுமை கொழித்து விளங்கியது இராசகிரிய நகரம். பல விண்மீன்களுக்கு நடுவே திங்களைப் போல மகத நாட்டிலுள்ள மற்ற ஊர்களுக்கெல்லாம் நடுமையாக நின்று முதன்மை வகித்தது அந் நகரம்.