பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இருளில் நிகழ்ந்த சந்திப்பு

183

‘இவன் இரவலன் இல்லை என்று கண்டுபிடித்து விடுவார்கள். இவைகளை எல்லாம் மீறி மணவறையின் உள்ளே நீ பதுமையைச் சந்திக்கத் திடீரென்று அவள் முன் தோன்றும் போது தனிமையாலும் அச்சத்தினாலும் அவளே ஏதாயினும் கூக்குரல் இட்டுவிடலாம். அந்தக் கூக்குரலைக் கேட்டுத் தோழிப் பெண்களும் காவலர்களும் ‘என்னவோ? ஏதோ?’ என்று திடுக்கிட்டு உள்ளே வந்து விடுவார்களானால் உன்பாடு தப்புவதற்கு வழியில்லை. இன்ன இன்ன துன்பங்கள் எல்லாம் உன் திட்டத்தில் கலந்திருக்கின்றன. இவைகளைத் தவிர்த்து விலக்கிக்கொண்டு சாமர்த்தியமாக நடந்துகொள்ள முடியுமானால் நீ உன் திட்டத்தை நிறைவேற்றிக் கொள்வதில் எங்களுக்கு மறுப்பு இல்லை” என்று நண்பர்கள் உதயணனுக்கு விரிவான மறுமொழி கூறினர்.

நண்பர்களின் மறுமொழியைக் கேட்ட பின்னரும் உதயணன் தன் கருத்தை மாற்றிக் கொள்ளவில்லை. “பதுமைக்குக் காவலராக வரக்கூடிய யாவரும் அறுபது வயதிற்கு மேற்பட்டவர்களே. அந்தப் புரங்களில் பெண்களோடு பழகும் காவலர்கள் பெரும்பாலும் வயது சென்றவர்களாகவே இருப்பார்கள். பகற்காலம் முழுவதும் வேலை செய்து அலுப்படைந்த அந்தக் காவலர்கள் மாலையில் இங்கே பதுமைக்குக் காவலாக வரும்போது களைப்போடு வருவார்கள். எனவே அவர்களைப் பற்றிக் கவலைப்பட வேண்டுவது இல்லை. மேலும் பதுமையை நான் காமன்கோட்டத்து மணவறைக்குள் சந்திக்கப் போவது இருட்டிய பின்புதானே? இருளில் என்னை யாராலும் அறிந்து கொள்ள முடியாது. என்னைக் காப்பாற்றிக்கொள்ள எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதும் எனக்கு நன்றாகத் தெரியும்” என்று நண்பர்களுக்கு உதயணன் மறுமொழி கூறினான். அதற்குமேல் நண்பர்களும் அவனை வற்புறுத்தித் தடுக்கவோ மறுக்கவோ விரும்பவில்லை.

உதயணன் தன் விருப்பப்படியோ, பதுமாபதி இரவில் காமன்கோட்டம் வருகின்ற ஒருநாளை அறிந்து முன்னேற்பாட்டோடு இருந்தான். மணவறை மாடத்திற்குள்ளே அவன்