பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

190

வெற்றி முழக்கம் / நா. பார்த்தசாரதி

உதயணனுக்கு அப்போதுதான் புரிந்தது. ‘எப்படியாவது அரண்மனையில் தொடர்பு கொள்ள வேண்டுமென்பதற்காக மாறுவேடத்தோடு இந்த நாடகத்தை மேற்கொண்டோம். ஆனால், எடுத்த எடுப்பிலேயே இங்கே நமக்காகப் பெரிய சோதனை காத்துக் கொண்டிருக்கிறதே?’ என்று வருந்தினான் அவன். அரசனுடைய வேண்டுகோளுக்கு விடை கூறாமல் ‘சொல்லிய வாக்கின்படி புதையலைக் கண்டு பிடிப்பது. எவ்வாறு?’ என்ற சிந்தனையில் ஆழ்ந்துவிட்டான் உதயணன்.

சற்றும் எதிர்பாராத உதவி ஒன்று அவனுக்கு அப்போது கிடைத்தது. ஏற்கனவே புதையலின் இருப்பிடத்தைச் சந்தேகமாகக் குறித்து வைத்திருந்த சில சுவடிகள் அரண்மனையில் இருந்தன. அந்தச் சுவடிகளைப் படித்துப் பார்த்தும் அதுவரை முயன்ற எல்லாருமே ஒருமுகமாகத் தோல்விதான் அடைந்திருந்தார்கள். இருப்பினும் அந்தச் சுவடிகளைக் கொண்டு எப்படியாவது தன் சொல்லைக் காப்பாற்றிக் கொண்டு விடலாம் என்ற நம்பிக்கை உதயணனுக்கு ஏற்பட்டது. மறைபொருளோடு சுவடியில் இருந்த சில குறிப்பான வார்த்தைகளை அறிந்து கொண்டால் வெற்றி கிட்டிவிடும் என்ற எண்ணம் உறுதியாக அவனக்கு இருந்தது. உதயணன் உறுதிக்கு விதியும் தேவையான முறையில் உதவி புரிந்தது என்றுதான் உரைக்க வேண்டும் சுவடியிலிருந்து படித்து அறிந்ததில் அனுமானமாக அவனுக்குத் தெரிந்த ஒரிடத்தினை ஆட்களைவிட்டு அகழ்ந்து பார்த்தால், அதுவே புதையல் இருக்கும் இடமாகத் தெரிந்தது. தருசகனின் தந்தை தாம் வைத்துச் சென்றிருப்பதாக எழுதியிருந்த எல்லாப் பொருள்களும் தோண்டிய அவ்விடத்திலேயே கிடைத்துவிட்டன. தருசகனுக்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை. உதயணனுக்கோ தற்செயலாகவும் சாதாரணமாகவும் தனக்குக் கிடைத்துவிட்ட பெரிய வெற்றியை எண்ணி வியப்பாக இருந்தது. தருசகன் உதயணனைப் பாராட்டித் தன் அரண்மனைக் கலைஞர்களுள் அவனும் ஒருவனாகப் பதவி ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றான். உதயணன் எதிர்பார்த்த தொடர்பு அவனுக்குக் கிடைத்துவிட்டது.