பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

200

வெற்றி முழக்கம் / நா. பார்த்தசாரதி

பக்கத்தில் வட்ட வடிவமான பல தட்டுக்களில் அருமையான பாக்கு வகைகளும் வேறு சில வாசனைப் பொருள்களும் வரிசையாக வைக்கப்பட்டிருந்தன. இப்படி அவன் அவைகளைப் பார்த்து மகிழ்ந்து கொண்டிருந்தபோது, அறையின் மற்றொரு கட்டிலில் பதுமை அவனை எதிர்பார்த்து அமர்ந்திருந்தாள்.

உதயணன் அவள் வரவைக் கவனிக்கவில்லை. அப்போது இரவு நேரம். முழுமதி தன் அமுதக் கதிர்களைப் பரப்பிக் கொண்டிருந்தது. உதயணன் பதுமை வெகு நேரம் தனக்காக மிக அருகிலேயே அமர்ந்துகொண்டு காத்திருப்பதை அறியாமல் மாடத்தில் வரைந்திருந்த சித்திரங்களின் நயங்களையே பார்த்துச் சுவைத்துக் கொண்டிருந்தான். உதயணன் அப்படித் தன்னை வேண்டுமென்றே பாராமுகமாக இருக்கிறான் என்றெண்ணிய பதுமை மிக்க சினமும் ஊடலும் கொண்டாள். அவன் அவ்வாறிருப்பதை அவளால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அவனுக்கு ஏதாவது பாடம் கற்பிக்க எண்ணினாள் அவள். இதையெல்லாம் ஒன்றும் அறியாமல், உதயணன் தற்செயலாக அவள் இருந்த பக்கம் திரும்பினவன், அவளை அதுவரை கவனியாமல் இருந்துவிட்டதற்காக வருந்தியவாறே அருகில் நெருங்கினான். நெருங்கிய அவன்மேல் சீறி விழுந்தாள் பதுமை. உதயணன் திடுக்கிட்டான். தான் செய்துவிட்ட பெருந்தவறு என்ன என்று அவனுக்குப் புரியவில்லை. தழுவச் சென்ற அவனுடைய கைகளை அவள் ஒதுக்கித் தள்ளினாள். அவளுடைய அப்போதைய தோற்றத்தைக் கண்ட உதயணன் முதலில் ‘என்னவோ? ஏதோ?’ என்று பயந்துவிட்டான். அப்போது அதே தோற்றமுடன், சினம் பொங்கும் குரலில் பதுமை அவனை நோக்கிப் படபடப்போடு பேசத் தொடங்கினாள்.

“உச்சிக் கொண்டையையும் சிறகையும் அழகாக வாரித் திருத்தமுற நறுமணத் தைலம் பூசிச் சோறும் பாலும் தூய்மையாக ஊட்டினாலும், குப்பை கிளைக்கும் கோழி மீண்டும் குப்பை மேட்டைத்தானே தேடிக்கொண்டு ஓடும். ஆடவர்