பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

208

வெற்றி முழக்கம் / நா. பார்த்தசாரதி

களின் நறுமணத்தோடு கூடிய தென்றற் காற்று உள்ளே குளிர்ச்சியாக வீசியது. அது அவர்கள் காதலுக்குச் சான்று கூறி உதயணன் பாடியாக வேண்டும் என்று கட்டளையிடுவது போலிருந்தது.

உதயணன் பதுமையின் வேண்டுகோளை மறுக்க முடியாமல் பாட்டுப் பாடிக்கொண்டே யாழையும் மீட்ட ஆரம்பித்தான். அப்போது அவனுக்கு உஞ்சை நகரிலிருந்து தத்தையுடன் பிடிமேல் வரும்போது தவறிப்போன ‘கோடபதி’ என்னும் தனது தெய்வீக யாழின் நினைவு வந்து விட்டது. அந்த நினைவுடன் பதுமைக்கு முன் அவன் பாடிய பாட்டில் பண்ணும் இசையும் பருந்தும் அதன் நிழலும் போலப் பொருந்தி மிக அழகாக அமைந்துவிட்டன. அமுதம் போலச் செவிக்குள் பாய்ந்த அவன் யாழிசையையும் வாய்ப்பாட்டையும் கேட்டுப் பதுமை வியப்புக் கடலுள் ஆழ்ந்தாள். ‘தும்புரு காமனுக்கு அடுத்தாற்போல யாழிற் சிறந்தவன். தும்புருவுக்கும் அடுத்த இடம், யாழ் வாசிப்பில் மானிட வேந்தர்களில் ஒரே ஒருவனுக்குத்தான் உண்டு. அந்த ஒருவன்தான் உதயணன்!’ என்றெண்ணினாள் பதுமை. ‘ஒன்று, நம்முன் அந்தணனாக அமர்ந்திருக்கும் இவன் உதயணனாக இருக்கவேண்டும்! அல்லது உதயணனைக் காட்டிலும் சிறப்பாக யாழ் வாசிக்கத் தெரிந்த வேறோர் அந்தண இளைஞனாகவே இருக்க வேண்டும்!’ என்று தன் வியப்புக்கு இடையே பதுமை நினைத்தாள். அந்த ஐயத்தையும் தன் மனத்திலிருந்து வெளிச் சென்று விடாதபடி மறைவாகவே வைத்துக் கொள்ள வேண்டுமென்று உறுதி கொண்டாள். அவ்வளவு கலைநலமும் திறமும் உடையவன் தன் உள்ளங்கவர்ந்த காதலனாக இருந்ததில் அவளுக்குத் தனிப்பட்ட உவகை ஏற்பட்டது. பதுமையின் வேண்டுகோளை மறுக்க முடியாமல் உதயணன் அன்று மாலையில் பாடிக் கொண்டே யாழ் வாசித்த அந்த நிகழ்ச்சியால் ‘தனக்கு நன்கு யாழ் தெரியும். அதுவரை அறியேன் என்று மறுத்ததெல்லாம் நடிப்பு’ என்று தானே வெளிப்படுத்திக் கொண்டது போல் ஆயிற்று.