பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பகைவர் படையெடுப்பு

213

வெளியிலேயே தங்கிவிட்டான். இவ்வாறு அவன் இங்கு வந்து விட்டபோது பதுமை கன்னிமாடத்தில் இவனைக் காணாது தவித்தாள். ஆனால் விரைவில் திரும்பி வந்து விடுவான் என்ற நம்பிக்கை மட்டும் அவளுக்கு உள்ளூற இருந்தது. எங்காவது தவப் பள்ளியில் யாரையாவது பார்க்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கும். நம்மிடம் கூறினால் நாம் வெளியேற அனுமதிக்க மாட்டோம் என்றெண்ணி அவராகவே சொல்லாமல் போயிருக்க வேண்டும் என்று கருதிக் கலங்கித் துடிக்கும் தன் மனத்தைத் தேற்றிக்கொள்ள முயற்சி செய்து கொண்டிருந்தாள் அவள்.

உண்மையில் அவன் அங்கே காணாமற்போனது அவளுக்குப் பெருந் துயரத்தையே அளித்தது. அவள் உதயணனை எண்ணி ஏங்கியதுபோல் கேகயத்தரசன் அச்சுவப் பெருமகன் அவளை எண்ணி ஏங்கிக் கொண்டிருந்தான். தருசகன் கேகயத்தரசன் அச்சுவப் பெருமகனுடன் அளவளாவி இருந்த அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு அவன் பகையரசர்கள் சிலர் ஒன்றுகூடி அவன்மேல் படையெடுத்து மகத நாட்டு எல்லைக்கே வந்துவிட்டனர். அவர்கள் தருசகன் சிறிதும் எதிர்பாராத நிலையில் அவனைத் தாக்க வேண்டும் என்ற கருத்துடன் பல நாள்களாக அதற்கு வாய்ப்பை எதிர் நோக்கிக் கொண்டிருந்தவர்கள். இப்போது அந்த வாய்ப்பு அவர்களுக்குக் கிடைக்கவே விரைவில் முழு ஆற்றலோடு ஒன்று சேர்ந்து மகத நாட்டைக் கைப்பற்றிவிடும் எண்ணத்துடனே புறப்பட்டு வந்திருந்தார்கள். தருசகன்மேல் நெடுநாட்களாகப் பகை கொண்டிருக்கும் விரிசிகன் என்ற அரசன் இந்தப் படையெடுப்பிற்கு முக்கியக் காரணமாக இருந்தான். அத்தினபுரத்து அரசன் எலிச் செவியன், வாரணாசி மன்னன், அயோத்தி வேந்தன், போதனபுரத்தை ஆண்டு வந்த மிலைச்சன், துவராபதித் தலைவனாகிய சங்கரன், சீ நகரத்து மன்னன் வேசாலி என வேறு ஆறு அரசர்களும் விரிசிகனுக்கு உதவியாகத் தத்தம் படைகளுடனே மகதவேந்தனை எதிர்த்து வெற்றி கொள்ள எண்ணி உடன் வந்திருந்தனர். அவர்களிலே சிலர் பதுமையை