பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

216

வெற்றி முழக்கம் / நா. பார்த்தசாரதி

அழைத்தாள். மாணகன் எப்படியும் அவனுடைய பழைய இடமாகிய காமன் கோட்டத்திற்குத்தான் திரும்பிச் சென்றிருக்க வேண்டும் என்ற நம்பிக்கையோடு அவனைப் பிரிந்து தான் படுகின்ற துயரம் முதல் பகையரசர் படையெடுப்பு வரை எல்லாச் செய்திகளையும் அவனிடம் கூறி வருமாறு அந்தத் தோழியை அனுப்பினாள் பதுமை. அது கேட்ட தோழி அயிராபதியும் உடனே அதற்கு ஒப்புக்கொண்டு விரைவாய்க் காமன் கோட்டத்திற்குச் செல்லப்புறப்பட்டாள்.

பதுமையின் நம்பிக்கை சரியாகவே இருந்தது. நல்ல வேளையாக அயிராபதி காமன் கோட்டத்திற்குள் நுழைந்த போது, தன் நண்பர்களைத் தேடி வந்த உதயணன் அங்கே இருந்தான். அவன் அப்போது அதே ‘மாணகன்’ என்னும் அந்தண இளைஞன் வடிவத்திலேயே இருந்ததனால் அவனைப் பார்த்ததும் அடையாளம் கண்டுகொள்ள அயிராபதிக்கு மிகுந்த நேரமாகவில்லை. அவள் உதயணன் அமர்ந்திருந்த இடத்தை நெருங்கிப் பதுமை அவனுக்குக் கூறி அனுப்பிய செய்திகளை எல்லாம் விரிவாகச் சொன்னாள். திடீரென்று பகையரசர்கள் மகத நாட்டின்மீது படையெடுத்து வந்திருப்பதையும், அதனால் அரண்மனையில் திகைப்பும் கலவரமும் நிரம்பியிருப்பதையும்கூட அவள் வணக்கத்துடனே விவரமாக எடுத்துச்சொன்னாள். உதயணன் அவள் கூறிய யாவற்றையும் கவனத்துடனே கேட்டான். பதுமை அயிராபதியின் மூலம் அனுப்பியிருந்த செய்திகளும், பகைவர் படையெடுப்பைப் பற்றிய விவரங்களும் ஒரு வகையில் அவனுக்கு மகிழ்ச்சியையே கொடுத்தன. தன்னுடைய திறமையையும், ‘உண்மையில் தான் யார்’ என்பதையும் தருசகனுக்கு வெளிக் காட்டுவதற்குப் பகைவர்களின் இந்தப் படையெடுப்பு ஒரு நல்ல வாய்ப்பு என்று உதயணன் எண்ணினான். இதே வாய்ப்பைக் கொண்டு பதுமைக்கும் தனக்கும் உள்ள காதலிலும் தான் வெற்றியடைந்துவிட முடியும் என்பது அவன் நம்பிக்கை. இத்தகைய நம்பிக்கையும் மகிழ்ச்சியும் நிலவுகிற எண்ணங்களோடு தோழி அயிராபதிக்கு மறுமொழி கூறி அனுப்பினான் அவன்.