பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

240

வெற்றி முழக்கம் / நா. பார்த்தசாரதி

சித்திராங்கதன் நின்ற பக்கமாகச் சென்று வளைத்தான் அவன். சித்திராங்கதனோ ஒரு பெரிய யானைமேல் வாளோடு அமர்ந்து கொண்டும் நின்று கொண்டும் சந்தர்ப்ப வசதிகளுக்கு ஏற்றவாறு மாறிமாறிப் போர் செய்து கொண்டிருந்தான். உதயணன் அப்போது தேரில் இருந்துகொண்டே சித்திராங்கதனை வளைத்தான். யானைமேல் அவன் அமர்ந்திருந்த உயரத்திற்குத் தேரில் உதயணன் நின்ற இடம், முக்கால் மட்டத்தில்தான் இருந்தது. திடீரென்று எலிச் செவியின் தம்பி சற்றே அஜாக்கிரதையாக இருந்த நேரம் பார்த்து உதயணன் தன் தேரிலிருந்து கையில் வாளுடனே எதிரிலிருந்த அவனுடைய யானையின் மத்தகத்தை நோக்கி நேரே தாவாகத் தாவிப்பாய்ந்தான். பாய்ந்த வேகத்தில் எதிரியின் வசம் யானைமேல் இருந்த வேல், வாள் முதலிய ஆயுதங்களைக் கீழே தள்ளி சித்திராங்கதனை நிராயுத பாணியாக்கினான். பின் அவன் அணிந்திருந்த இடுப்புக் கச்சையினாலேயே அவனுடைய கைகளை இறுக்கிக் கட்டி விட்டான். எலிச்செவியின் தம்பி அவசரத்தால் ஏற்பட்ட திகைப்பும் மலைப்பும் நீங்கித் தன்னுணர்வு பெற்று உதயணனை எதிர்க்கத் தொடங்குவதற்குள்ளேயே அவன் இவ்வளவையும் செய்து முடித்துவிட்டான். அதே வேகத்தோடு வேகமாக அவனை யானையிலிருந்து கீழே தள்ளித் தானும் இறங்கினான். இறங்கினவுடன் கீழே கைகள் கட்டுண்ட நிலையில் விழுந்து கிடக்கும் அவனைத் தன் தேருக்கு இழுத்து வந்து தேர்க்காலில் பிணித்துவிட்டான். உதயணன் தன் தேர்க்காலில் வைத்துக் கட்டியபின் எலிச் செவியின் தம்பி சித்திராங்கதன் கட்டுக்களிலிருந்து ஆடவோ அசையவோ முடியவில்லை; அவன் வாய்விட்டு அலறினான். அந்தக் குரல் உருமண்ணுவாவுடனும் கேகயத்தரசனுடன் போரிட்டுக் கொண்டிருந்த எலிச்செவியைத் திரும்பிப் பார்க்கும்படிச் செய்தது. திரும்பிப் பார்த்த எலிச்செவி, தன் தம்பி சித்திராங்கதன், உதயணனுடைய தேர்க் காலிலே கட்டப்பட்டிருப்பது கண்டு மனக் கொதிப்படைந் தான். எலிச்செவியின் தம்பி சித்திராங்கதனை மடக்கு