பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

விதி வென்றது

23

மறுநாள் காலை பிரச்சோதனனின் அரசவை கூடியது. பிரச்சோதனனுடைய அரசவை மிகப்பெரியது. அவனுடைய அவையின் கண்ணுள்ள மந்திரச் சுற்றத்தினர் விதியொன்றொழியப் பிறவற்றிற்குக் கட்டுப்படுதலை அறியார். கூற்றுவனையும் மாற்றும் ஆற்றல் படைத்தவர். முற்றுந்துறந்த முனிவர்கள் பலர் அதில் இருந்தனர். அவர்களுக்கெல்லாம் வணக்கம் செய்த வண்ணம் அவையிற்புகுந்தான் பிரச்சோதனன். அவையில் பலவகை அறிவு நூல்களின் நயங்கள் ஆராயப்பட்டன. அறிஞர் பலர் உரையாடினர். அவ்வகையாகக் கிடைத்த கேள்வி யின்பத்தில் சிறிது நேரம் ஈடுபட்டான் அரசன். அப்போது உதயணன் நினைவு அவனுக்கு வந்தது. உதயணனை அழைத்து வரச் சொல்ல வேண்டுமென அவன் எண்ணினான். இதற்குள் அன்றைய அவை ஒருவாறு முடிந்தது. உதயணனை அழைத்து வருமாறு ஓர் ஏவலாளனை அனுப்பினான். அவை முடிந்துவிட்டமையால் அரசன் உதயணனுக்காகத் தன் கோயிலுள்ளே காத்திருந்தான். உதயணன் நன்றாக அலங்கரிக்கப்பட்ட பெண் யானை ஒன்றின்மேல் அமர்ந்து வந்து சேர்ந்தான். மணல் முற்றத்தில் யானை மேலிருந்து இறங்கிய அவனைப் பிரச்சோதனன் எதிரே சென்று வரவேற்றான். தன்னோடு சமமான ஆசனத்தில் உதயணனை அமர்த்திக்கொண்டு பலவிதமான உபசாரங்களை அவனுக்குச் செய்தான். ‘இதை உன் சொந்த அரண்மனையைப்போல நினைத்துக் கொள்ளுதல் வேண்டும். நமக்குள் வேறுபாடு வேண்டாம்’ என்றான். அப்போது பணிப்பெண் ஒருத்தி பவழத்தட்டில் தாம்பூலம் கொணர்ந்து அளித்தனள். அதை இருவரும் தரித்துக் கொண்டனர். சற்று நேரம் மன மகிழ உரையாடியபின் உதயணனை அங்கே சிறிது பொழுது இருக்கும்படியாகக் கூறிவிட்டுப் பிரச்சோதன மன்னன் அரண்மனையின் உட்புறஞ் சென்றான். உட்புறத்திலிருந்த சிவேதன் மன்னனை வணங்கி வரவேற்றான். அரசன் சிவேதனைக் கொண்டே உதயணனிடம் தன் வேண்டுகோளைத் தெரிவிக்க விரும்பினான். "சிவேதா! உதயணன் யாழ் வாசிப்பில் வல்லவன் என்பதை நீயும் கேள்விப்