பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/272

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

270

வெற்றி முழக்கம் / நா. பார்த்தசாரதி

நீ நிறைவேற்றியாக வேண்டும்” என்று தருசகன் வருடகாரனிடம் மிக அந்தரங்கமாக வேண்டிக் கொண்டான்.

அன்றிரவே கோசாம்பி நகரத்தை நோக்கி அமைச்சர்கள் நால்வரையும் முதன்மையாகக் கொண்டு மகத நாட்டுப் படைகள் புறப்பட்டன. உதயணன், பதுமை ஆகிய இருவருக்கும் வேண்டிய எல்லாப் பொருள்களும் படைக்குப் பின்பு சென்றன. புதுமணக் காதலர்களாகச் செல்கின்றவர்கள் ஆகையால், அவர்களுக்கென்று சிறப்புமிக்க பரிசிற் பொருள்கள் பலவற்றை அனுப்பி வைத்திருந்தான் தருசக மன்னன். படை புறப்பட்டுச் சென்ற சிறிது நேரத்திற்கெல்லாம் உதயணன் தருசகனிடம் விடை பெற்றுக்கொள்ள வந்தான். அப்போது தருசகன் அவனிடம் சில செய்திகளை மனம் விட்டுப் பேசினான். உதயணனைப் பிரியப் போகின்றோமே என்ற கலக்கமும் அந்தப் பேச்சிலே தொனித்தது. “உதயணன், உதயணன் என்று அதைப் புகழுக்குரிய பேரரசன் ஒருவனின் பெயராகக் கேள்விப்பட்டு அவ்வளவிலேயே மகிழ்ந்திருந்தவன் நான்! ஆனால் இன்றோ, நீ எனக்கு நல்ல சமயத்தில் செய்வதற்கு அரிய உதவி ஒன்றைச் செய்ததுடன் எனக்கு நெருங்கிய உறவினனாகவும் ஆகிவிட்டாய். பேரரசர்கள் யாவருக்கும் நீ நண்பனாகவும் உறவினனாகவும் இருக்கிறாய். உஞ்சை நாட்டு வேந்தன் பிரச்சோதனனும் என் போலவே மகட் கொடை முறையில் உனக்கு உறவினனே. இப்போது ஆருணியோடு, நீயும் என் படைகளும் நிகழ்த்த இருக்கும் போரில் உனக்கு ஏதாவது தளர்ந்த நிலை ஏற்படுமானால், பிரச்சோதன மன்னனுடைய உதவியைக்கூட நீ கோரலாம். அவனும் உன் வேண்டுதலை மறுக்கமாட்டான். மலைச் சிகரத்திலே பெய்த மழை நீர்போல, ஆருணியும் அவனைச் சேர்ந்தவர்களும் சிதறியோடித் தோற்றுப்போக வில்லையானால் நானே நேரில் அந்தப் போர்க்களத்திற்கு வருவேன். அவனைப் புறமுதுகிட்டு ஓடச் செய்து ஆட்சியை, உனக்கு வாங்கி அளிப்பேன். அதுவே இயலாமற் போயினும் எனக்கோ, பிரச்சோதனனுக்கோ நண்பர்களாகிய எந்த ஓர்