பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/280

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

278

வெற்றி முழக்கம் / நா. பார்த்தசாரதி

மாக நடத்தினர். ஏற்பாடுகள் செய்யப்பட்டன. எல்லாத் திட்டங்களுக்கும் சூழ்ச்சிகளுக்குமே பொதுவான நியதி ஒன்றுண்டு. அதுதான் நினைப்பளவிலும் பேச்சளவிலும் கவர்ச்சியுடையதாக இருத்தல், செயலில் இறங்கும்போது தான் எண்ணமும் சொல்லும் எவ்வளவிற்கு எளிமையானவை என்று தோன்றும். பளிங்கு அறையிலே இரகசியத் தனிமையில் மூவரும் கூடிச் சிந்தித்தபோது சற்றே மலைப்புத் தென்பட்டது! சொல்லும்போது சாதுரியத்தோடு திட்டத்தைச் சொல்லி விவரித்த வருடகாரனுக்கே ‘தான் கூறியவைகள் செயலுக்கு வருவது இவ்வளவு கடினமா!’ என்ற வியப்பு உண்டானது. ஆயினும் திட்டத்தை எவ்வகையிலேனும் நடத்தியே தீருவது என்ற முடிவு மூன்று பேருக்கும் உறுதியாக இருந்தது. இந்த நிலையில் ஆருணியை ஒற்றறிதற்குக் கோட்டைக்குள்ளே மாறுவேடத்தோடு சென்றிருந்த சில ஒற்றர்கள் ‘அவசரமாக அரசனைக் காணவேண்டும்’ என்று சொல்லிக்கொண்டே திரும்பி அங்கே வந்தனர். ஒரு சேவகன் இந்தச் செய்தியை உள்ளே வந்து உதயணனிடம் கூறினான். உதயணனுக்கு வியப்பு ஏற்பட்டது. உடனே அவர்களை உள்ளே வரச்சொல்லி உரைக்குமாறு சேவகனை அனுப்பி னான். சேவகன் சென்ற சிறிது நேரத்திற்கெல்லாம் ஒற்றர்கள் உள்ளே நுழைந்து மூவரையும் வணங்கினர். வணங்கியபின் ஒற்றர்கள் செய்தியைக் கூற, மூவரும் ஆவலோடு அதைக் கேட்டனர். அந்த ஒற்றர்கள் படையெடுப்புக்கு வேண்டிய ஒற்றுச் செய்திகளையும் அறிந்து வந்திருந்தனர்.

கோட்டைக்குள்ளே சென்று ஒற்றறிந்து வந்த அந்த வீரர்களிற் சிலர், மகத நாட்டிலிருந்து உதயணனோடு வந்திருந்தவர்கள். சிலர் உதயணனைச் சேர்ந்தவர்கள். இப்போது அவர்கள் அறிந்து வந்து கூறிய செய்தியிலிருந்து தாங்கள் ஏற்கெனவே கருதி முடிந்திருந்த திட்டத்தைக் கைவிட வேண்டி நேர்கிறது என்பதை மூவரும் உணர்ந்தனர். இங்ஙனம் திட்டமே மாறிப் போகும்படியாக ஒற்றர்கள் கூறிய செய்திதான் என்ன? “ஆருணி, கோட்டை மதில்