பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/286

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

284

வெற்றி முழக்கம் / நா. பார்த்தசாரதி

நன்மைகள் விளையும் என்பதைப் பற்றியும் விவரித்தான். ஆருணியின் கேடுகாலம் அவனுக்கு அருகில் நெருங்கி வந்து கொண்டிருந்ததோ என்னவோ, சேனாபதி மகன் கூறியவுடனே ஆருணி அதற்கு மகிழ்ச்சியுடனே சம்மதித்து விட்டான். உடனே ஆருணி, தன் அரசவையைச் சேர்ந்த சகுனி கெளசிகன் என்னும் பெயரையுடைய அமைச்சன் ஒருவனையும் வேறு மூவரையும் அழைத்து உதயணனோடு வருடகாரன் பகைத்துக் கொண்டு தங்கள் பக்கம் சேர இருப்பதைக் கூறி, அவனுடைய மனக் கருத்தை அறிந்து அவனை அழைத்து வருமாறு ஆணையிட்டான். அவர்கள் தங்கள் அரசனின் ஆணையை மேற்கொண்டு சேனாபதி மகனுடன் வருடகாரனைக் காண்பதற்குப் புறப்பட்டனர்.

54. சேனாபதி பதவி

சேனாபதி மகனுடன் ஆருணியால் அனுப்பப்பட்ட சகுனி கெளசிகன் முதலிய நால்வரும் வருடகாரனைச் சந்திப்பதற்காக அவன் இருப்பிடம் வந்து சேர்ந்தனர். வருடகாரன் அவர்களை அன்போடு வரவேற்று இருக்கச் செய்துவிட்டுத் தன்னோடு மகத நாட்டிலிருந்து வந்த தாரகாரி என்பவனை மறைவாக வரவழைத்து அவன் மூலமாக, ஆருணியால் அனுப்பப்பட்ட சகுனி கெளசிகன் முதலியோர் தன்னைச் சந்திக்க வந்திருக்கிறார்கள் என்ற செய்தியை, உடனே உதயணனுக்குத் தெரிவித்து விட்டான். ‘ஆருணிக்குப் பக்கபலமாக இருக்கும் முக்கியமான ஆட்களை அகப்பட்ட வரை தொலைத்துவிட வேண்டும்’ என்று உதயணனும் வருடகாரனும் முன்பே தங்களுக்குள் ஒர் இரகசியத் தீர்மானம் செய்து கொண்டிருந்தனர். அதற்காகவே வருடகாரன் தன்னிடம் வந்திருப்பவர்களைப் பற்றி உதயணனுக்குத் தாரகாரி மூலம் அவ்வளவு அவசரமாகச் சொல்லி அனுப்பினான்.

தாரகாரி வந்து சொல்லிய செய்தியைக் கேட்டதும் உதயணன், பிங்கலன் முதலிய வீரர்களைத் திரட்டி வருட