பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/291

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

படைச்செலவு

289

படையுடனே தங்கியிருந்த வஞ்சகாந்தை-கந்தவதி நதிகளின் சங்கமத்துக்கு அப்பால் சிறிது தொலைவிலே, தவதிசயந்தம் என்னும் மலைத் தொடர் இருந்தது. இந்த மலைத் தொடரின் அடிவாரத்தை அரணாகக் கொண்டே உதயணனின் படை தங்கியிருந்தது. ஆருணியின் பக்கம் படை மிகுதியாகி வருவது கண்ட வருடகாரன், ‘எவ்வாறேனும் சூழ்ச்சி புரிந்து இந்தப் படைகள் ஒன்றாகச் சென்று தாக்காமல் தனித்தனியே இவற்றை உடைத்துவிட வேண்டும்’ என்று தன் மனத்திற்குள் கருதினான்.

“பாஞ்சாலர் வேந்தே மாரிக் காலத்தில் மேலும் மேலும் மழை பொழிந்து கொண்டிருக்கும்போது நீரைப் போக விடாமல் ஒரே குளத்தில் நிரப்பினால் குளம் தானே உடைந்து போகும். கேவலம் மிகக் குறைந்த படைகளோடு மலையில் பதுங்கிக் கொண்டிருக்கும் ஓர் அரசனை எதிர்க்க, இவ்வளவு படைகளையும் ஒன்றாக ஒரே திசையில் நாம் கொண்டு செல்ல வேண்டும் என்பதில்லை. உதயணனுக்கு உதவியாக, அறிவில்லாத மலைவாழ் வேட்டுவர்கள் எவரேனும் அங்கே சேர்ந்தாலும் சேர்ந்திருக்கலாம். அப்படி இருந்தால் அவர்களையும் எதிர்க்க வேண்டும். ஆகையால் படைகளைப் பல பிரிவாகப் பிரித்து, மலைத் தொடரின் பல திசைகளிலும் போக்க வேண்டும்” என்று ஆருணியை நோக்கிக் கூறினான் வருடகாரன். வருடகாரன் கூறியபடியே செய்வதற்கு ஆருணி சம்மதித்துவிட்டான். வருடகாரனின்மேல் அவனுக்கு அவ்வளவு நம்பிக்கை! ‘வருடகாரன் தன்னிடம் சொல்லுவன யாவும் தனக்கு நன்மையே தரும்’ என்று உறுதியாக நம்பினான் அவன்.

ஆருணியின் உடன்பாட்டைப் பெற்றவுடனே வருடகாரன் படைகளைப் பல கூறுகளாகப் பிரித்தான். அவ்வாறு பிரித்த உடனே தன் ஆள் ஒருவன் மூலமாக, ‘எந்தெந்தப் படை எப்படி வருகிறது? அதை எவ்வாறு நிர்மூலமாக்கி விடலாம்’ என்பதை உதயணனுக்கும் தானே முன்னறிவிப்பதாகச் சொல்லி அனுப்பிவிட்டான். தவதிசயந்த மலையில்

வெ.மு- 19