பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/310

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

308

வெற்றி முழக்கம் / நா. பார்த்தசாரதி

ஏதும் தெளிவாகப் புரிந்துகொள்ளவோ, அனுமானித்துக் கொள்ளவோ முடியாத வியப்புடன் அவன் மிகுந்த நேரம் யானைகளுக்கு அஞ்சி வேங்கை மரத்தின் அடர்ந்த கிளைகளுக்குள் பதுங்கிக் கொண்டிருந்தான். வெகு நேரங்கழித்து யானைகள் யாவும் அங்கிருந்து மலைப் பகுதிகளுக்கு சென்றுவிட்டன என்பதை நன்கு கண்டு தெளிவாக உறுதி செய்து கொண்டபின்பே, அவன் கீழே இறங்கி ஆவலோடு மூங்கிற் புதரை நெருங்கினான். அருகே சென்று பார்த்ததில் இரண்டு மூங்கில்களுக்கு நடுவே அழகிய சிறிய யாழ் ஒன்று அகப்பட்டுச் சிக்கிக்கிடப்பது தெரிந்தது. காற்றால் ஆடும் மூங்கில் கழிகள், யாழின் நரம்புகளில் உராய்கின்றபோது, அதிலிருந்து அரிய இன்னிசை எழுவதையும் அருஞ்சுகனே அப்போது நேரிற் கண்டான். அவன் வியப்பு வளர்ந்தது. அந்த யாழின் ஒலியைக் கேட்டு யானைகள் எல்லாம் மயங்கி நின்றதனால், அதன் சிறப்பியல்பையும் அவன் தானாகவே அனுமானித்துக் கொண்டான். அதை எப்படியும் தான் கைப்பற்றிக் கோசாம்பி நகருக்கு எடுத்துக்கொண்டு போகவேண்டும் என்ற அடக்க முடியாத ஆசை அவனுக்கு உண்டாயிற்று.

‘இந்த யாழ் கின்னரர்களோ, இயக்கர்களோ மறந்து இங்கே தவறவிட்டுச் சென்றதாக இருப்பினும் சரி, தேவருலகத்திலிருந்து நழுவி விழுந்ததாக இருந்தாலும் சரி, இதை எப்படியும் நான் எடுத்துக் கொண்டுதான் போகப்போகிறேன்’ என்று அவன் தன் மனத்திற்குள் ஒரு உறுதி செய்து கொண்டான். மூங்கிற் புதரில் புகுந்து யாழ் கெடுதியுறாதபடி மெல்ல அதை விடுவித்து எடுத்துக்கொண்டு, பின் தனக்கு அதைக் கிடைக்கும்படி செய்த நல்வினையை வாழ்த்தி வணங்கிவிட்டு, மேலே பயணத்தைத் தொடர்ந்தான் அவன். இரண்டொரு நாள்களில் தன் பயணத்தை முடித்தவனாக அவன் கோசாம்பி நகரடைந்து, அங்குள்ள தன் நண்பர்கள் வீட்டில் தங்கினான்.