பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/311

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இழந்த பொருள்களின் வரவு

309

காட்டில் கிடைத்த யாழும் அவனிடமே பத்திரமாக இருந்தது. இறுதியாக அருஞ்சுகன் தங்கியிருந்த ஒரு நண்பனின் வீடு கோசாம்பி நகரத்து அரண்மனைக்கு மிகவும் அருகில் இருந்தது. நண்பன் வீட்டில் அனைவருமே அவனுக்கு நல்ல பழக்கமுடையவர்கள். யாவரும் அவனுடைய சுற்றத்தினர்களைப் போன்றவர்கள் என்றே துணிந்து கூறலாம். அவன் அங்கு வந்து தங்கி இரண்டொரு நாள்கள் கழிந்தபின், ஒருநாள் மாலை எல்லோருடைய விருப்பத்தையும் நிறைவேற்றுவதற்காக அவனே யாழ் வாசிக்கும்படி நேர்ந்தது. நண்பர் வீட்டில் யாவரும் ஏற்கெனவே அவனுக்கு யாழ் வாசித்தலில் நல்ல திறமை உண்டு என்பதை அறிவார்கள். ஆகையால் அன்று மாலை எப்படியும் அவன் தங்களுக்கு யாழிசை விருந்து அளித்துத்தான் ஆகவேண்டும் என்று அவனை வற்புறுத்தினார். அவர்களுடைய வேண்டுகோளை மறுக்க இயலாமல், அன்று மாலை அந்த வீட்டின் மேல்மாடத்தில் எல்லோரும் கேட்கும்படியாகக் காட்டிலே தனக்குக் கிடைத்த யாழை எடுத்து வாசித்தான் அருஞ்சுகன். அற்புதமான இயல்பு வாய்ந்த அந்தத் தெய்வீக யாழில் அவனுடைய கைவண்ணம் கேட்போரைக் கவர்ந்து மயங்கியது.

செவ்வழிப் பண்ணைப் பாடினான் அவன். அதே நேரத்தில் அரண்மனை மேல்மாடத்தில் பதுமையோடு பேசி மகிழ்ந்து கொண்டிருந்த உதயணனின் செவிகளில் காற்றினிலே கலந்துவந்து ஒலித்தது இந்த யாழிசை. அவன் திகைத்தான்.

60. இழந்த பொருள்களின் வரவு

தொலைவிலிருந்து காற்றோடு கலந்துவந்த அந்த யாழிசையைக் கேட்டு அது தனக்குப் பழக்கமான ஓசையாயிருப்பதை உணர்ந்தான் உதயணன். எதிர்ப்புறத்துத் தெருவில் ஒரு வீட்டின் மேல்மாடத்திலிருந்து செவ்வழிப் பண்ணில் இசைக்கப்பட்டு, காற்றில் கலந்து வந்து