பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/330

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

328

வெற்றி முழக்கம் / நா. பார்த்தசாரதி

தனிமையாக இருக்க வேண்டும். இவ்வாறு விரதமிருந்தால் தத்தை உங்களிடம் வருவாள்” என்று மகிழ்ச்சி மலரும் உதயணன் முகத்தைக் கூர்மையாகப் பார்த்துக் கொண்டே கூறினான் வயந்தகன்.

உதயணன் அவ்வாறே விரதமிருப்பதாக வயந்தகனிடம் உறுதிமொழி தந்தான். வயந்தகன், ‘உருமண்ணுவாவின் சூழ்ச்சி வெற்றியே பெறும்’ என்ற நினைவோடு உதயணனிடம் விடைபெற்றுச் சென்றுவிட்டான். அவன் சென்ற பின்னர் உதயணன், பதுமையை அழைத்து, ‘அன்றிலிருந்து தான் வேறு சில பகைவர்களையும் வெல்லுவதற்காகச் சில மறைவான யோசனைகளில் ஈடுபடப் போவதால் அவள் சில நாள்கள் தன்னைச் சந்திக்கவே வேண்டா’ என்று ஒரு பொய்யைக் கற்பித்துக் கூறினான். அந்தச் சொற்களில் பதுமை சூதுவாது காணாது ‘சரி’ என்று ஒப்புக்கொண்டாள். பிறருக்கும் இதே போன்றதொரு காரணத்தைக் கூறித் தனக்குத் தனிமையைப் பூரணமாக ஏற்படுத்திக் கொண்டான் உதயணன். பின்னர் அன்று இரவு வயந்தகன் கூறியபடியே பள்ளியறையை மங்கலப் பொருள்களால் அலங்கரித்துத் தூய ஆடை அணிகளை அணிந்து கொண்டு வாசவதத்தை பற்றிய நினைவுகளை இடைவிடாமல் எண்ணியவனாகக் கோடபதியை வாசித்துக்கொண்டே உறங்கிவிட்டான். பள்ளியறையிலோ, பள்ளியறைக்கு வெளிப்புறத்திலோ வேறு யாரும் இல்லை. ‘ஒரு சிறு பணிப்பெண்கூட மறந்தும் அங்கே இருக்கக் கூடாது’ என்று கடுமையான ஆணையிட்டிருந்தான் உதயணன். எனவே பூரணமான முறையில் தனிமை நிலவியது அங்கே.

இந்த நிலையில் உருமண்ணுவாவும் வயந்தகனும், மதுகாப்பீர வனத்திலிருந்து இரவின் தனிமை அமைதியில் யாரும் அறிந்துகொண்டு விடாமல், வாசவதத்தையை அழைத்துக்கொண்டு அரண்மனைக்குப் புறப்பட்டனர். ‘எங்கே அழைத்துச் செல்லுகின்றார்கள்?’ என்ற விவரம் அரண்மனையை அடையும்வரை வாசவதத்தைக்குக்கூடத்