பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/357

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மானனீகை மயக்கம்

355

விடுவானோ?’ என்ற நடுக்கம் தத்தையை உள்ளுறப் பயங்கொள்ளச் செய்திருந்தது. எல்லாரையும் அறிமுகப்படுத்தி முடிந்தபின், “ஆம்! அது சரிதான்! உங்கள் தோழியரில் ஒரே ஒரு பெண்ணை மட்டும் நீங்கள் அழைத்துவராமல் மறைப்பதற்குக் காரணம் என்ன?” என்று வாசவதத்தை மேலும் நடுங்குமாறு ஒரு கேள்வியை வினாவினான் அவன். உதயணன், மானனீகை வராமல் இருந்ததைத்தான் அவ்வாறு கேட்கிறான் என்பதை அனுமானித்துக்கொண்டாள் தத்தை. அவனுக்கு மானனீகையின் மேலே அவ்வளவு பற்று ஏற்பட்டிருப்பதைக் கண்டு அவளுக்குப் பொறாமையும் சினமுமே ஏற்பட்டன.

“இங்கு வராமல் இருக்கும் அந்தப் பெண்ணிடம் உங்களுக்கு ஏதாவது பேச வேண்டுமானால் அவளைத் தனியாக அழைத்துப் பேசிக் கொள்வதுதானே? அதற்காக இவ்வாறு எங்கள் யாவரையும் கூட்டம் கூட்டி அதைச் சொல்வானேன்?” என்று தனது ஆத்திரத்தைப் புலப்படுத்தும் குரலில் பேசினாள் தத்தை. அவள் பொறாமையினாலேயே அவ்வாறு பேசுகின்றாள் என்பதை உணர்ந்துகொண்ட உதயணன் தன் காதல் மயக்கத்தை அவளறியாதபடி மறைத்துச் சாதுரியமாக வேறு ஒரு செய்தியைக் கூறினான். “தத்தை! அந்தப் பெண்ணை நான் காணக் கருதுவதில் தவறான நோக்கம் ஏதேனும் இருக்குமோ என்று நீ சந்தேகம் கொள்ள வேண்டாம். தோற்று இறந்துபோன என் பகைவனாகிய ஆருணியைப் பற்றிய சில முக்கியமான அரசியல் செய்திகளை அந்தப் பெண் அறிவாள் என்று நான் கேள்விப் பட்டேன். அதற்காகவே நான் அவளைக் காண வேண்டும்” என்று ஒரு பொய்யைக் கூறி அவள் சினத்தை மாற்றினான் உதயணன். இதைக் கேட்டதும் இது மெய் என்றே நம்பிய வாசவதத்தை உடனே ஒரு பணிப் பெண்ணைக் கூப்பிட்டு மானனீகை மறைந்திருக்கும் இடத்தைக் கூறி அவளை அழைத்து வருமாறு சொல்லி அனுப்பினாள்.

உதயணன் மானனீகையை அழைப்பது ஆருணியைப் பற்றி விசாரிப்பதற்கே என்று தெரிந்து கொண்டதால் தத்தை,